காலியாக உள்ள கடலூர் மாவட்ட நிலஅளவை பதிவேடு துறை உதவி இயக்குநர் பணியிடம்: பட்டா வழங்குவதில் முறைகேடுகள்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக மாவட்ட நிலஅளவை பதிவேடு துறை உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் வழங்குவதில்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக மாவட்ட நிலஅளவை பதிவேடு துறை உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட நிலஅளவை பதிவேடு துறை உதவி இயக்குநர் பணியிடம் கடந்த இருமாதமாக காலியாக உள்ளதால் விழுப்புரம் மாவட்ட உதவிஇயக்குநர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் நிலஅளவை பதிவேட்டு துறையில் பட்டா வழங்குவதில் காலதாமதமும், ஆய்வாளர் பொது இடமாறுதல் செய்யப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடலூர் மாவட்ட 6 தாலுக்காக்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நிலஅளவை ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது இடமாறுதல் செய்யப்படாததால் 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆய்வாளரும் ஒரே இடத்தில் பணியாற்றுவதால் பட்டா வழங்குவதில் முறைகேடுகளும், ஊழலும் அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் நிலைஅளவை உதவிஇயக்குநர் பணியிடம் காலியாக உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக நிலஅளவை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை.
சமீபத்தில் விருத்தாசலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ7ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நிலஅளவை ஆய்வாளர் அண்ணாதுரை என்பவரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடலூர் மாவட்ட நிலஅளவை பதிவேட்டு துறை உதவி பணியிடத்தை நிரப்பி, ஆய்வாளர்களுக்கு பொது இடமாறுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.