முகப்பு
தற்போதைய செய்திகள்

மாற்றுத் தலைவர் தேவையில்லை. மாற்றுக் கொள்கைதான் தேவை: ஜி.ராமகிருஷ்ணன்

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜேந்திரன்சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அரசியல் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் பி.மாசிலாமணி, ஆர்.சதானந்தம், பி.வாஞ்சிநாதன், எஸ்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

இந்தியாவை ஆள மாற்றுத் தலைவர் தேவையில்லை. மாற்றுக் கொள்கைதான் தேவை என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜேந்திரன்சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அரசியல் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் பி.மாசிலாமணி, ஆர்.சதானந்தம், பி.வாஞ்சிநாதன், எஸ்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: தனியார் நிர்வாகத்தின் பிடியில் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது. பல வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சமூகசேவையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை உருவாக்கிய பல்கலைக்கழகம். 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 12 ஆண்டுகள் சிறைவாசம் இருந்த கம்யூ கட்சி மூத்த தலைவர் உமாநாத், மூத்த தலைவர் முத்தையா ஆகியோர் இப்பல்கலையில் படித்தவர்கள். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இங்கு கல்வி கொள்ளையடிக்கப்படும் நிலை மாறியதுதான் வருத்தம். இதனை தொடர்ந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி பல்வேறு நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த கால ஆட்சிகளில் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது கோரிக்கை ஏற்று வெள்ளைக்காரன் உருவாக்கிய பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த அதிமுக அரசை மனதார பாராட்டுகிறேன். ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியாகும்.

கடந்த 20 ஆண்டுகளாக தாராளமய பொருளாதார கொள்கையை ஆதரித்து வரும் பாரதிய ஜனதா கட்சி, 20 ஆண்டுகளாக தாராளமய பொருளாதார கொள்கையை அமல்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்து வரும் காங்கிரஸ் கட்சி. இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். தற்போது இந்தியாவை ஆள மாற்றுத் தலைவர் தேவையில்லை. மாற்றுக் கொள்கைதான் தேவை. தாராளமய பொருளாதார கொள்கையில் கல்வி வியாபாரமானது ஒரு அம்சமாகும். நரேந்திர மோடி காந்தியடிகள் கனவு நினைவாக வேண்டும் என பேசி்யுள்ளார். அதாவது காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட வேண்டிய கட்சி என்ற கனவு. அதை மறுக்க முடியாது. அதே வேளையில் காந்தியின் மற்றொரு கனவான இஸ்லாமியர்களும், இந்துக்களும் சேர்ந்து வாழ வேண்டும் என உயிரை பணயம் வைத்து போராடியவர் காந்தி. கோட்சே, இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என காந்தியை சுட்டுக்கொன்றார். இதுபோன்ற மதக்கலவரத்தை தூண்டுபவர்கள் வேண்டாம் என்பதுதான் காந்தியின் மற்றொரு கனவு. அதுபோன்று பாஜகவின் வழிகாட்டியாக உள்ள ஆர்.எஸ்.எஸ் வேண்டாம் என்ற காந்தியின் கனவை மோடி நினைவாக்குவாரா?.

மேலும் மத்தியஅரசின் கொண்டு பென்ஷன் நிதி திட்டம் உள்ளிட்ட சட்டங்களை பாஜக ஆதரித்துள்ளது. இதனை மோடி, அத்வானி கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் ஆக.30-ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி கவலைப்பட மாட்டோம். அதே நேரத்தில் தாரளமய பொருளாதார கொள்கையை எக்காரணத்திலும் கைவிட மாட்டோம் என கூறியுள்ளார். எனவே காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயல்பட்டு வருகிறது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வன், ஜி.மாதவன், சி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர்குழு உறுப்பினர் எஸ்.சங்கமேஸ்வரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.