நிதிமுறைகேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முன்பு இருந்த இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி சேர்க்கை, ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நியமனங்களில் ரூ.7585
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முன்பு இருந்த இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி சேர்க்கை, ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நியமனங்களில் ரூ.7585 கோடி நிதிமுறைகேடு செய்துள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்- ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிதம்பரம் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.உதயசந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு முழுமையாக அரசு கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளாக நடைபெற்ற நிதிமுறைகேடுகள் களையப்பட்டு பல்கலைக்கழகம் 6 மாதமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்பு இருந்த இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை அரசோடு அவ்வழக்கில் இணைந்து எங்களது ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு சத்திக்க உள்ளது.
எங்களது முதல் கட்ட கோரிக்கையான பல்கலைக்கழகம் சட்டம் திருத்தப்பட்டது. இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரை நியமனம் செய்தது மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். அடுத்த கோரிக்கையான நிதிமுறைகேடுகள் குறித்து தமிழகஅரசு முழுமையான விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது. இக்கோரிக்கை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இல்லையெனில் இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் சென்னை அடையாறில் உள்ள இணைவேந்தர் குடியிருப்பு பங்களா உள்ளிட்ட இடங்கள் பல்கலைக்கழக டிரஸ்டிற்கு சொந்தமானது. எனவே அந்த இடத்தை மீட்டு தற்போதைய இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சருக்கு வழங்க வேண்டும்.
இது ஒரு அரசு பல்கலைக்கழகம். எம்.ஏ.எம்.ராமசாமி தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு பதிவியான இணைவேந்தர் பதவி மூலம் துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமிக்க முழுமையாக அதிகாரம் பெற்று இருந்தார். அதிகாரத்தை பயன்படுத்தி நிதிமுறைகேடு செய்துள்ளார். பல்கலைக்கழகத்தில் சிங்கிள் டெண்டர் மூலம் சவுத் இந்தியா கார்பரேஷன் நிறுவனத்திற்கு நிதிவழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது. அதனால் சிறப்பு பதவியான இணைவேந்தர் பதவி பறிக்கப்பட்டது. இதனை ஒட்டுமொத்த ஆசிரியர்கள், ஊழியர்கள் வரவேற்கிறோம்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் மீதும், தவறு செய்த அனைவரது மீதும் மேல்நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும். பல்கலைக்கழக நிதிநெருக்கடிக்கு அரசின் ஊதியக்குழுவோ, மத்திய, மாநில அரசோ காரணம் கிடையாது. தமிழகஅரசு ஆண்டு ஒன்றுக்கு ரூ.69 கோடி நிதி அளித்துள்ளது. ஆனால் தமிழகஅரசு மீது அவர் குற்றம் சாட்டுபவது அபாண்டமான பொய்யாகும். எம்.ஏ.எம்.ராமசாமி தனது கவுரவ பதவியை பயன்படுத்தி நிதிமுறைகேடு செய்ததால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர் அப்பதவிக்கு தகுதியற்றவராகிவிட்டார். இணைவேந்தராக அவர் இருக்கக்கூடாது என்ற உரிமையும், தகுதியும் எங்களுக்குதான் உண்டு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பணியில் சேர்ந்துள்ள எந்த ஒரு ஊழியரையும் வேலையிலிருந்து நீக்குவதையும், ஊதியத்தை குறைப்பதையும் ஏற்க மாட்டோம். அப்படி நடைபெற்றால் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்குவோம். அதே நேரத்தில் தவறு செய்துள்ள ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு துணை போகாது, தலையிடாது என கூட்டமைப்பு நிர்வாகிகள் பேராசிரியர் ஆர்.உதயசந்திரன், சி.மதியழகன் ஆதியோர் தெரிவித்தனர். பேட்டியில் போது பல்கலைக்கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரவி உடனிருந்தார்.