முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவில் கொள்ளை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியில் கோவிலில் புகுந்து திருடியதாக சட்டக்கல்லூரி மாணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து வெள்ளி

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியில் கோவிலில் புகுந்து திருடியதாக சட்டக்கல்லூரி மாணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து வெள்ளி பொருள்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி, அருணாசலநகர் பகுதிகளில் வீடுகள் மற்றும் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி உத்தரவின்பேரில், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் எல்.ராஜு, உதவி ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினர், திருநெல்வேலி நகரம் மேலரத வீதி பஸ் நிறுத்தத்தில்  சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள நெல்முடிக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சம்சுராஜ் என்பதும், திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.மேலும் இவர், தனது நண்பரான குமாருடன் சேர்ந்து கடந்த 5-ம் தேதி இரவு நடுவக்குறிச்சி நடுதீர்த்த அம்மன் கோவிலில் உண்டியல் பணம் ரூ.3420 மற்றும் இரண்டேகால் கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடியது தெரியவந்ததாம். தனது நண்பர்களான கோவையைச் சேர்ந்த முஸ்தபா மகன் அப்துல்ரகுமான, நடுவக்குறிச்சி அந்தோணிபாண்டியன் மகன் குமார், ஆண்டிப்பட்டி நடராஜன் மகன் அலெக்ஸாண்டர், திருப்புவனம் காத்தவராயன் மகன் ராஜதுரை ஆகியோருடன் சேர்ந்து கடந்த 13-ம் தேதி அதிகாலையில் முறப்பநாடு சிவன்கோவிலில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்ததாம். கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்ற நான்குபேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்சுராஜை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். திருடப்பட்ட வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →