சகஜானந்தா வாழ்ந்த இடத்திலேயே மணிமண்டபம் கட்டுவதுதான் பொருத்தமானதாகும்: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ கருத்து
சிதம்பரத்தில் தமிழகஅரசு சார்பில் சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் கட்டுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, நந்தனார் கல்விக்கழகம், சமூகஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்ற
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா வாழ்ந்த இடத்திலேயே மணிமண்டபம் கட்டுவது பொருத்தமானதாகும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழகஅரசு சார்பில் சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் கட்டுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, நந்தனார் கல்விக்கழகம், சமூகஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்ற அவரச ஆலோசனைக் கூட்டம் சாய்மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
எனது கோரிக்கையை ஏற்று அடித்தட்டு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் அமைக்க தமிழக முதல்வர் கடந்த 15-6-2013ல் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏற்கனவே உதவிஆட்சியராக இருந்த எல்.சுப்பிரமணியன் சுவாமி சகஜானந்தா வாழ்ந்த நந்தனார் பள்ளிக்கு அருகே சிதம்பரம்-சீர்காழி சாலையில் இரண்டரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்தும், அந்த இடத்திற்கு எவ்வித ஆட்சேபணை இல்லை என விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். மேலும் அந்த இடத்தில் உள்ள நீதிமன்ற தடை ஆணைக்கு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே வழக்கை விலக்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது சி.முட்லூர் அரசு கல்லூரி அருகே அமைக்க வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. எனவே சுவாமி சகஜானந்தா வாழ்ந்த நந்தனார் பள்ளி அருகேயே மணி மண்டபம் அமைக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் முன்னிலை வகித்தார். நந்தனார் கல்வி வளர்ச்சிக் கழக இயக்குநர் ரா.காவியச்செல்வன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்ததலைவர் பி.கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் குறிஞ்சிவளவன், அதியமான், ரா.நெடுமாறன், ரத்தினவேலு, செல்வமணி, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.