முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் பகுதியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் இருதினங்களாக பெய்து வரும் பலத்த மழையினால் போதிய நீரின்றி கவலையுற்று இருந்த நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் இருதினங்களாக பெய்து வரும் பலத்த மழையினால் போதிய நீரின்றி கவலையுற்று இருந்த நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் இந்த ஆண்டு வீராணம் ஏரி பாசனம் மூலமும் , வடக்குராஜன் வாய்க்கால் பாசனம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனம், கான்சாகீப் வாய்க்கால் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதைத்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கடந்த ஒருமாதங்களாக மேலாக கடும் வெய்யல் அடித்து வருவதால் போதிய நீரின்றி நேரடி நெல் விதைப்பு முறையில் விதைத்த நெல்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டது. நீரில்லாததால் களைகள் மண்டியது. நிலத்தில் ஈரப்பதம் இருந்தால்தான் களைக்கொல்லி மருந்து போட முடியும் என விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்தனர். இந்நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் பலத்த மழையினால் மகிழ்ச்சியுற்றுள்ளனர்.

மழை விபரம் வருமாறு: சிதம்பரம் -44 மி.மீ, அண்ணாமலைநகர்-48 மி.மீ, சேத்தியாத்தோப்பு- 44 மி.மீ, புவனகிரி -21 மி.மீ, காட்டுமன்னார்கோயில்- 20 மி.மீ, லால்பேட்டை- 20 மி.மீ, ஸ்ரீமுஷ்ணம்- 13 மி.மீ, பரங்கிப்பேட்டை- 2 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.