கடலூர் மாவட்டத்தில் 27 மணல் குவாரிகள் மூடல்
கடலூர் மாவட்டம், வெள்ளாறு படுகையில் கார்மாங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, முடிகண்டநல்லூர், அம்பேரிமேடு ஆகிய இடங்களிலும், தென்பெண்ணையாற்றில், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும்
கடலூர் மாவட்டத்தில் 27 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வெள்ளாறு படுகையில் கார்மாங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, முடிகண்டநல்லூர், அம்பேரிமேடு ஆகிய இடங்களிலும், தென்பெண்ணையாற்றில், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் மற்றும் மேல்குமாரமங்கலம் ஆகிய 6 இடங்களில் லாரிகளுக்கான மணல் குவாரிகளும், 21 இடங்களில் மாட்டுவண்டி, டிராக்டர் மூலம் மணல் எடுப்பதற்கான, சிறிய அளவிலான குவாரிகளும் செயல்பட்டு வந்தன. இவை அனைத்தும் கடந்த, 13-ம் தேதி முதல் மூடப்பட்டன.
இதன் காரணமாக கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார், அரசு கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்க மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது: சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. மணல் குவாரிகளில் மணல் ஏற்றவும், யார்டுகள் மூலம் விற்பனை செய்யும் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அரசு அனுமதித்த விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
கூடுதலாக விலைக்கு மணல் விற்பனை செய்தாலோ அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் எடுத்தாலோ நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஒப்பந்ததாரர்கள் செய்யும் முறைகேடுகளால் அதிகாரிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மணல் குவாரி அமைக்க பசுமை தீர்ப்பாயத்துக்கு விண்ணப்பித்துள்ளோம். அங்கு தடையின்மை சான்று பெற்றவுடன் குவாரிகள் மீண்டும் செயல்படும் என்றனர்.