முகப்பு
தமிழ்நாடு

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!

வால்பாறைக்கு கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய வேன் விபத்தில் பலியானோர் விவரத்தைப் பற்றி...

Updated On : 17 ஏப்ரல், 2026 at 11:13 PM
வால்பாறைக்கு வந்து விபத்தில் சிக்கி பலியான கேரள சுற்றுலாப் பயணிகள். - படம்: சமகாலிகா மலையாளம்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:42 PM

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானார் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவை அடுத்து உள்ள பாங் - பள்ளிப்பரம்பு அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் என 8 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 13 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு வேனில் புறப்பட்ட அவர்கள் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்குச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து வால்பாறைக்கு வந்துள்ளனர்.

வால்பாறையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், பொள்ளாச்சி வழியாக ஊர் திரும்ப முடிவு செய்துள்ளனர். சுற்றுலா வாகனத்தை ஓட்டுநர் அ. முஹமது ஃபாசித் (21) இயக்கியுள்ளார். அந்த வேன் மாலை 5 மணியளவில் வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி மலையில் இருந்து கவிழ்ந்தது. பின்னர், அது சுமார் 800 அடி பள்ளத்தில் உருண்டு ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு சாலையில் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.

Advertisement

இந்தக் கோர விபத்தில் வேனில் பயணம் செய்த அஜிதா (54), ரம்லா (52), ஜூஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகிய 7 பெண்கள், 2 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் தூக்கி வீசப்பட்டும், உடல் நசுங்கியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓட்டுநர் முஹமது ஃபாசித், நௌஷாத் (39), ஷஹாதீன் (11), மஸ்னீன் (10) ஆகிய 4 பேர்களும் கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 11:07 PM

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை, பொள்ளாச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தனர்.

அதேபோல் கேரள மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டியும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசுடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

விபத்து குறித்து மலப்புரம், பாலக்காடு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள், விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் பொள்ளாச்சிக்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது என்றார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பள்ளி அமைந்துள்ள குருவா ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா வந்த நிலையில் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

 9 Malayalis died after a tempo traveller fell into a gorge in Valparai, Tamil Nadu. There were 14 people in the vehicle, including the driver. The condition of 3 of the injured is critical. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.