முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு இடைத்தேர்தல்: நடத்தை விதிகள் அறிவிப்பு; வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யத் தடை

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான க.மகரபூஷணம்

தற்போதைய செய்திகள்

ஏற்காடு இடைத்தேர்தல்: நடத்தை விதிகள் அறிவிப்பு; வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யத் தடை

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான க.மகரபூஷணம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:24 PM
பகிர்:

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான க.மகரபூஷணம் அறிவித்துள்ளார்.

 ஏற்காடு இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என்னென்ன விஷயங்களை செய்யக் கூடாது, எவற்றை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாவது:

எவற்றை செய்யலாம்

அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் குறித்தும், அவர்களது கட்சி கொள்கைகள் குறித்தும் அதன் திட்டங்கள் குறித்தும் பேசலாம். பிரசாரத்தில் தனி மனிதனுடைய அமைதியான குடும்ப வாழ்க்கை முற்றிலும் பாதுகாக்கப்பட வேண்டும். உள்ளூர் காவல் துறைக்கு உத்தேசிக்கப்பட்ட கூட்டம் நடத்துவது குறித்து முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

 கூட்டம் நடத்தும் பகுதியில் ஏதேனும் தடை உத்தரவு அல்லது தடை செய்யப்பட்ட நிலை இருந்தால், விதி விலக்கு கேட்டு முன்கூட்டியே மனு செய்து அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடத்தப் பயன்படும் ஒலிப்பெருக்கி அல்லது இதர கருவிகளை பயன்படுத்த காவல்துறை, சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற வேண்டும்.

 கூட்டம் நடத்தப்படும் நேரம், இடம், ஊர்வலம் ஆரம்பிக்கும் நேரம், இடம், வழிதடங்கள், ஊர்வலம் ஆகியவை குறித்து போலீஸில் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும். போக்குவரத்து தடங்கள், மற்ற தடைகள் ஏதேனும் ஊர்வலப் பாதையில் உள்ளனவா என்று அறிந்து அவற்றை அனுசரித்து ஊர்வலம் செல்ல வேண்டும். தேர்தல் காலங்களிலும், வாக்குப்பதிவு அன்றும் வேட்பாளர், கட்சியினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 வாக்காளரைத் தவிர வேட்பாளர், தேர்தல் ஏஜென்ட், பூத் ஏஜென்ட், தேர்தல் ஆணையத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்குச் சாவடிகளில் அனுமதிக்கப்படுவர். மற்றபடி அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நுழைய அனுமதி இல்லை.

 எந்த ஒரு புகாரோ அல்லது பிரச்சனையோ தேர்தல் பணி சம்மந்தமாக ஏற்பட்டால் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டலம் - செக்டார் மாஜிஸ்திரேட், தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். பிரசாரம் முடிவடைந்ததும் வாக்காளர், வேட்பாளர், முகவர் ஆகியோரைத் தவிர வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

எவற்றை செய்யக் கூடாது

அரசு செலவில் விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணும் இடத்திலோ வாக்காளராக இல்லாத நிலையில் எந்த அமைச்சரும் நுழையக் கூடாது. அரசுப் பணிகளை தேர்தல் பிரசார பணிகளுடன் சேர்த்து செய்ய கூடாது. வாக்காளர்களை தூண்டும் விதத்தில் பணம், இதரப் பொருள்களை வாக்காளர்களுக்கு அளிக்கக் கூடாது.

 வாக்காளர்களிடம் சாதி, சமயம், மொழி சம்பந்தமான உணர்வுகளைத் தூண்டக் கூடாது. கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைப் பற்றி கேலி செய்யக் கூடாது. தனிப்பட்டவரின் வீட்டு முன்பு அவருடைய கருத்துக்கு எதிராக தகராறு செய்தல் கூடாது. ஆதாரமற்ற புகார்களைக் கூறி மாற்று கட்சியினர், அவர்களது தொண்டர்களை கேலி செய்தல் கூடாது.

 கோயில், மசூதி, பேராலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. அங்கு பேசுதல், பாடுதல், தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் செய்யக் கூடாது. உள்ளூர் சட்டத்திற்குட்பட்டு எவரும் எவருடைய நிலம் கட்டடம் சுற்றுச்சுவர், வாகனம் ஆகியவற்றில் கொடிகள் நடுதல், பேனர் கட்டுதல், நோட்டீஸ் ஒட்டுதல், வாசகங்கள் எழுதுதல் ஆகியவற்றை முறையான அனுமதியின்றி செய்யக் கூடாது.

 மற்ற கட்சியினர் செல்லும் ஊர்வலப் பாதையில் செல்லக் கூடாது. ஊர்வலத்தில் பொருள்கள், லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி போன்றவற்றை கொண்டுவரக் கூடாது. மற்ற கட்சியினர், வேட்பாளரால் பொருத்தப்பட்ட விளம்பரங்களை அழித்தல், நீக்குதல் கூடாது. வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் போஸ்டர், கொடிகள், சின்னங்கள் வைப்பதோ, ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதோ, சிலிப்புகள் வழங்குவதோ கூடாது.

 உரிய அலுவலரின் அனுமதியின்றி காலை 6 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பின்பும் வாகனங்களில் ஒலிப் பெருக்கி வைத்தோ, ஒரு இடத்தில் கட்டியோ பிரசாரம் செய்யக் கூடாது. தேர்தல் காலத்தில் மது, லஞ்சம் கொடுப்பது கூடாது.

 வியாபாரம் செய்யும் வாகனங்களில் கொடி, துண்டுப் பிரசுரம் ஆகியவற்றை பொருத்தக் கூடாது. ஆனால் மாவட்டத் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று பொருத்தலாம். அனுமதிச் சீட்டின் அசலை முன் பக்கத்தில் ஒட்டியிருக்க வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →