நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அக்டோபர் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அக்டோபர் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் பி.கண்ணபிரான் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உள்பட்ட இடத்தில் தேவாராஜ் என்பவர் லாட்ஜ் கட்டுகிறார். அதற்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சணா பட்நாயக் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையைடுத்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சணா பட்நாயக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தொட்டபெட்டா பஞ்சாயத்து பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு தவறுதலாக அனுமதி வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டடம் கட்டுவதை நிறுத்த நோட்டீஸ் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பின்பற்றவில்லை எனக் கூறி பி.கண்ணபிரான் கடந்த 2012-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட லாட்ஜ் உரிமையாளர் அந்தக் கட்டடத்தை முழுமையாகக் கட்டிமுடித்துவிட்டார் எனவும், அதன் அருகில் மேலும் ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது எனவும் இதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தற்போது கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள அர்ச்சணா பட்நாயக் அக்டோபர் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.