முகப்பு
தற்போதைய செய்திகள்

மூடிக் கிடக்கும் கிராம நிர்வாக அலுவலங்கள்:  வி.ஏ.ஓ.க்களைத் தேடி அலையும் மக்கள்

திருக்கோவிலூர் வட்டத்தில் மொத்தமுள்ள 117 கிராம நிர்வாக அலுவலக பணியிடங்களில் தற்போது சுமார் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறிப்பாக வி.ஏ.ஓ.க்கள் எந்த கிராமத்தில் பணிபுரிகிறார்களோ

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:30 PM
பகிர்:

திருக்கோவிலூர் பகுதியில் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்கள் மூடிக் கிடக்கிறது. இதனால் நகர்புறத்தில் தங்கியுள்ள வி.ஏ.ஓ.க்களைத் தேடி கிராம மக்கள் அலைந்து வருகின்றனர். 

திருக்கோவிலூர் வட்டத்தில் மொத்தமுள்ள 117 கிராம நிர்வாக அலுவலக பணியிடங்களில் தற்போது சுமார் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறிப்பாக வி.ஏ.ஓ.க்கள் எந்த கிராமத்தில் பணிபுரிகிறார்களோ, அதே கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று அரசு விதியும், நீதிமன்ற உத்தரவும் உள்ளது.  கிராமங்களில் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு, இறப்புப் பதிவு, ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் விநியோகம், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்புமிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ.க்கள் உள்ளனர்.தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்ய முடியும். ஆனால், இப்பகுதியில் மிகப் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் நகர்ப் புறத்தில் வீடு மற்றும் விடுதிகளில் வாடகை எடுத்து தங்கி வருகின்றனர்.

பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வராத நிலையில் எந்நேரமும் அவர்களுக்கான அலுவலகம் மூடியே கிடக்கிறது. இதனால் மக்களுக்கான பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து நகர்ப்புறத்தில் தங்கியுள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தேடிச் சென்று மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டியதாகிறது.

இந்நிலையில் கிராமப் புறங்களில் ஏற்படும் விபத்து மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய வி.ஏ.ஓ.க்கள் நகரப்புறத்தில் தங்கியிருப்பதால், கிராமத்தில் ஏற்படக்கூடிய ஒருசில உண்மை சம்பவங்களை சரியாக அறிந்து கொள்ள முடியாததாகி விடுகிறது. மேலும் பல்வேறு சான்றிதழ் உரிய காலத்தில் கிடைக்காமல் போவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் 24 மணி நேரமும் தங்கிப் பணியாற்றும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு மட்டுமல்ல, முக்கியக் கோரிக்கையும்கூட. இவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் பணிபுரியும் கிராமத்திலேயே வி.ஏ.ஓ.க்கள் வசிக்கிறார்களா என்பதை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா?

முழு கட்டுரையைப் படிக்க →