முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் நவ.6 முதல் 16-ம் தேதி வரை ராணுவப் பணிக்கு ஆள் சேர்க்கை முகாம்

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில்  ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வரும் நவ.6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ராணுவப் பணிக்கு ஆள் சேர்க்கை முகாம்

Updated On : 31 அக்டோபர், 2013 at 5:55 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:03 AM

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில்  ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வரும் நவ.6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ராணுவப் பணிக்கு ஆள் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

     இந்த முகாமில் தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      ராணுவப் பணி சேல்ஜர் ஜி.டி. பணிக்கு கடந்த 1992, நவ.6-ம் தேதியில் இருந்து 1995, மே 6-ம் தேதிக்குள் பிறந்தவர்களும், சோல்ஜர் டெக்னிக்கல், டெக்னிக்கல் ஏவியேசன், டெக்னிக்கல் டிரஸ்ஸர், நர்சிங் அசிஸ்டெண்ட், கிளர்க், டிரேட்ஸ் மேன், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கு கடந்த 1990, நவ.6-ம் தேதியில் இருந்து 1996, மே 6-ம் தேதிக்குள் பிறந்தவர்களும் தகுதி பெற்றவராவர்.

Advertisement

       முகாம் நடைபெறும் நாட்கள்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சோல்ஜர் ஜெனரல் பணிக்கு நவ.6-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, நவ. 7-ம் தேதி உடற் தகுதி தேர்வு நடைபெறும். இப் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பில் 45 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

        சோல்ஜர் டெக்னிக்கல், டெக்னிக்கல் ஏவியேசன், டெக்னிக்கல் டிரஸ்ஸர், நர்சிங் அசிஸ்டெண்ட் ஆகிய பணிகளுக்கு நவ.8ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, நவ.9-ம் தேதி உடற் தகுதித் தேர்வு நடைபெறும். இப் பணிகளுக்கு ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோல்ஜர் டிரேட்ஸ் மேன் பணிக்கு நவ.9-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, நவ.10-ம் தேதி உடற் தகுதி தேர்வு நடைபெறும். இப் பணிக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

        சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கு நவ.10-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, நவ.11-ம் தேதி உடற் தகுதித் தேர்வு நடைபெறும். இப்பணிக்கு

பிளஸ் 2 கலை, அறிவியல், வர்த்தகம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றும், மற்ற பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகதம் மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   சான்றிதழ்கள்: ராணுவ பணிக்கான ஆள்சேர்க்கை முகாமிற்குச் செல்வோர் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடம் மற்றும் ஜாதிச் சான்று, கிராம நிர்வக அலுவலர் அல்லது பள்ளி, கல்லூரி முதல்வரிடமிருந்து கடந்த 7 மாதங்களுக்குள் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று ஆகியற்றின் அசல் மற்றும் அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெறப்பட்ட 3 நகல்கள், 15 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 10 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். முன்னாள் மற்றும் தற்போதை படை வீரர்களின் வாரிசுகள் சம்மந்தப்பட்ட படை ஆவண காப்பகத்தில் பெறப்பட்ட உறவுமுறை சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும். பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல், என்.சி.சி., மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்களையும் கொண்டு செல்லலாம்.

      ராணுவப் பணிக்கான ஆள்சேர்க்கை முகாம் குறித்து www.joinindianarmy.nic.in என்ற இணைய தள முகவரியிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.