கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய செவிலியர் கைது
.கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய செவிலியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது வியாழக்கிழமை செய்தனர்.
.கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய செவிலியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது வியாழக்கிழமை செய்தனர்.
கடலூர் புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். கட்டட தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி, இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது தமிழக அரசு வழங்கும் கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தார்.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரூ.12,000 உதவித்தொகையை ரூ.4,000 வீதம் மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது. அதன்படி ஆனந்திக்கு முதல் கட்டமாக ரூ.4,000 வழங்கப்பட்டது. இதற்கும் ரூ.500 லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் வழங்கியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து 2ம் கட்ட நிதி உதவிக்கு கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வரும் சத்யவதி(42), ஆனந்தியின் கணவர் குமரனிடம் ரூ.500 கொடுத்தால் தான் உதவித்தொகை வாங்கி கொடுக்க முடியும் என காலம் கடத்தி வந்தார். ஆனந்திக்கு குழந்தை பிறந்து 10 மாதங்களாகியும் இரண்டாம் கட்ட உதவித்தொகையை சத்யவதி வாங்கி கொடுக்கவில்லை.
இதுகுறித்து குமரன் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து வியாழக்கிழமை காலை குமரனிடம் ரசாயன பவுர் தடவிய ரூ.500 பணத்தை போலீஸார் கொடுத்து அதனை சத்யவதியிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதன்படி ரூ.500 பணத்தை மகப்பேறு மருத்துவமனையில் பணியில் இருந்த சத்யவதியிடம் குமரன் கொடுத்தார். அதனை சத்தியவதி வாங்கியபோது அங்கு மறைந்திருந்த போலீஸார் சத்யவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.