பிள்ளையார் சிலை கரைப்பதில் இருதரப்பினர் மோதல்: 9 பேர் கைது
சிதம்பரம் அருகே அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (27) உள்ளிட்ட 7 பேர், விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையாரை ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகாமையில்
சிதம்பரம் அருகே பிள்ளையார் கரைப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் இருவர் காயமடைந்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (27) உள்ளிட்ட 7 பேர், விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையாரை ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகாமையில் கிளியனூர் அருகே உள்ள வெள்ளாற்றில் கரைக்கச் சென்றனர். அப்போது கிளியனூர் காலனியைச் சேர்ந்த சேர்ந்த தமிழ்ஆனந்தன் (34) என்பவர் உங்க ஊரிலேயே கரைக்காமல் இங்கு வந்து ஏன் கரைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் ராஜா உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து தமிழஆனந்தனை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதில் காயமுற்ற தமிழ்ஆனந்தன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தமிழ்ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீஸார் ராஜா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிந்து அருள் (19), மோகன்ராஜ் (25), ஞானப்பிரகாசம் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து கிளியனூர் காலனியைச் சேர்ந்த தமிழ்ஆனந்தனின் ஆதரவாளர்கள் சதீஷ்குமார், மணி, சுரேஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் அழிச்சிக்குடி கிராமத்திற்கு சென்று ராஜாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமுற்ற ராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷ்குமார் (21), மணி (21), சுரேஷ்குமார் (21), மணிகண்டன் (21), ராஜதுரை (23), வேல்வேந்தன் (30) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.