மணல் கடத்தலை பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் மீது தாக்குதல்
சிதம்பரம் அருகே மணல் கடத்தலை பிடிக்கச் சென்ற குமராட்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை 6 பேர் கொண்ட கும்பல் மறித்து தாக்கியுள்ளனர். இதில் காயமுற்ற இருவரும் வயல்வழியாக தப்பி
சிதம்பரம் அருகே மணல் கடத்தலை பிடிக்கச் சென்ற குமராட்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை 6 பேர் கொண்ட கும்பல் மறித்து தாக்கியுள்ளனர். இதில் காயமுற்ற இருவரும் வயல்வழியாக தப்பி வந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் எனுமிடத்தில் கொள்ளிடம் ஆற்றில் தானே புயல் சிறப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவர்கள் 5 டிராக்டர்கள் மணல் எடுத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் வெங்கடாஜலம், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மணல் எடுத்துச் செல்ல அனுமதியளித்துள்ளனர். இந்நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஒருசிலர் தில்லைநாயகபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அனுமதியின்றி கூடுதலாக பொக்லீன் மூலம் மணல் அள்ளிச்சென்று கடத்தப் படுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த குமராட்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, காவலர்கள் மாரிமுத்து, ராமலிங்கம் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று பொக்லீனையும், மணல் டிராக்டரையும் பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்ற டிராக்டரை போலீஸார் துரத்திச் சென்றனர். அப்போது ம.உடையூர் அருகே 6 பேர் கொண்ட கும்பல் போலீஸாரை வழிமறித்து மணல் அள்ளப்பயன்படுத்தும் சம்மட்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீஸார் வாய்க்காலில் குதித்து வயல்வழியாக தப்பியபோது ஊர்மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, காவலர் மாரிமுத்து ஆகியோர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து மேல்ராதாம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் நேருவை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.