முகப்பு
தற்போதைய செய்திகள்

குப்பைகளை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தெருவில் தேங்கியுள்ள குப்பைகளையும், சாக்கடை தண்ணீரையும் அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:46 PM
பகிர்:

தெருவில் தேங்கியுள்ள குப்பைகளையும், சாக்கடை தண்ணீரையும் அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சென்னை அடையாறு காந்தி நகரைச் சேர்ந்த காந்திமதி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் உள்பட சென்னை மாநகர் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. குப்பைகள் தினமும் அகற்றப்படாததால் தெருக்கள் முழுவதும் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 4 வாரங்களாக சென்னை மாநகரில் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. மழை நீர் சேகரிப்பு முறை சரியாக நடைமுறையில் இல்லாததால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகரித்துள்ளன.

இதனால் 10 முதல் 15 வரையுள்ள குழந்தைகள் டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 15 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளை எழுத முடியாமல் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தெருக்களிலும், முக்கிய சாலைகளிலும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும், குப்பைகளை தினமும் அகற்றி சுகாரத்தைப் பாதுகாக்கவும்  சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி எம். சத்தியநாராயணா ஆகியோர், இந்த வழக்கு குறித்து வரும் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசின் உள்ளாட்சித் துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →