தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் பி.பழனியப்பன்
அறிவுசார் தமிழகத்துக்கு ஏற்ற உயர்கல்வியை வழங்க தமிழக அரசு திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறது. உலக அளவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 23 சதவிகிதமாகவும், வளர்ந்த நாடுகளில் 54
தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பி.பழனியப்பன் மேலும் பேசியதாவது:
அறிவுசார் தமிழகத்துக்கு ஏற்ற உயர்கல்வியை வழங்க தமிழக அரசு திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறது. உலக அளவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 23 சதவிகிதமாகவும், வளர்ந்த நாடுகளில் 54 சதவிகிதமாகவும், இந்திய அளவில் 16 சதவிகிதமாகவும் உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கியுள்ள விஷன்-2023 திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 25 சதவிகிதமாக உயரும்.
இதைக் கருத்தில் கொண்டு ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் 36 கலை-அறிவியல் கல்லூரிகளைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவில்பட்டியில் புதிய கல்லூரி தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர புதிதாக 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், 32 சமுதாய கல்லூரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி, மாணவர்கள் மீது தனிக்கவனத்தைக் காட்டி வருகிறார்.
தகவல்தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், நன்னெறி ஆகியற்றுடன் கூடியதாக உயர்கல்வி அமைய வேண்டும். வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக தொலைநோக்கு சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும். கி.மு.7-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தின் தட்சசீலத்தில் உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த வகையில் இப்போதும்கூட இந்தியாவில், உயர்கல்வித் துறையில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.உயர்கல்வி பயில்வோருக்காக இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மடிக்கணினிகளை வழங்கி தமிழக அரசு ஊக்கப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உருவாகும் பொறியாளர்களில் 20 சதவிகிதம் பேர் தமிழகத்தில் பயின்று செல்கிறார்கள் என்பது பெருமைக்குரியதாகும். கல்வி என்பதை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். ஏதேனும் ஒன்றை அடுத்தடுத்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பெற்றோரை மதிப்பதோடு, ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதும் மாணவர்களின் தலையாய கடமை என்றார் அவர்.