முகப்பு
தற்போதைய செய்திகள்

வழிகாட்டு நெறிகளின்படி கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக பள்ளி கட்டண குழுவிற்கு உயர்நீதிமன்றம் ஆணை

சிதம்பரம் மற்றும் வயலூரைச் சேர்ந்த காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வீனஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவை தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிகளின்படி கட்டணம் நிர்ணயம் செய்ய,

Updated On : 3 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சிதம்பரம் மற்றும் வயலூரைச் சேர்ந்த காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வீனஸ் மெட்ரிக் பள்ளி ஆகியவை தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிகளின்படி கட்டணம் நிர்ணயம் செய்ய, தமிழக பள்ளிக் கட்டண குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நீதிபதி ரவிராஜபாண்டியன் மற்றும் நீதிபதி சிங்காரவேலு தலைமையில் இயங்கிய பள்ளிக் கட்டணக்குழு மெட்ரிக் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை எதிர்த்து சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 370 மெட்ரிக் பள்ளிகள் 2011-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

நீதிபதி பானுமதி தலைமையிலான சென்னை அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கில் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டு இப்பள்ளிகளுக்கு கட்டணத்தை புதிதாக நிர்ணயம் செய்யுமாறு 3.5-2011-ல் தீர்ப்பாணை வெளியிட்டது. மீண்டும் கட்டண நிர்ணயம் செய்யும் போது கட்டணக்குழு பின்பற்றி வேண்டிய உயர்நீதிமன்ற வழிகாட்டுப்படிவம் இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இடைக்கால நிவாரணமாக 15 சதவீத கட்டண உயர்வையும் பள்ளிகளுக்கு அனுமதித்தது. 2012 டிசம்பருக்குள் புதிய கட்டண நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கட்டணக்குழுவிற்கு ஆணை பிறப்பித்தது.

ஆனால் கட்டண நிர்ணயக்குழு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை நிராகரித்துவிட்டு அவசர, அவசரமாக ஒரு படிவத்தை தயாரி்த்து உயர்நீதிமன்ற ஆணையின்படி முழுமையான விபரங்களை தர 370 பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் குறைவான கட்டணத்தை நிர்ணயம் செய்து ஆணையி்ட்டது. அதனால் அப்பள்ளிகளில் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டு ஆசிரியர்-அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டது.சிதம்பரம் பள்ளிகள் மீண்டும் வழக்கு தொடுத்தது: பள்ளி கட்டண நிர்ணயக்குழு வெளியிட்டு தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள், தமிழ்நாடு பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டம் 2009 மற்றும் 3.5.2012 நாளிட்ட சென்னை அமர்வு உயர்நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அதனால் கடுமையான நிநி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சிதம்பரம் மற்றும் வயலூர் காமராஜ் மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகி சி.ஆர்.லட்சுமிகாந்தன், வீனஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகி எஸ்.குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கு தொடுத்தனர்.

அரசியல் சட்டம் 226-ன் படி தொடரப்பட்ட இவ்வழக்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் டி.எஸ்.சிவஞானம் அடங்கிய சென்னை உயர்நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில் புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்காக கட்டண குழுவிற்கு தெனிவான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆசிரியர் மற்றும் அலுவலர் ஊதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு திட்டத்திற்கான செலவு மற்றும் பணிக்கொடைத் தொகை ஆகியவற்றிற்கான செலவு, பள்ளி வளர்ச்சிப் பணிக்கான செலவு, உள்கட்டமைப்பிற்கான செலவு போன்ற பல்வேறு செலவுகளின் அடிப்படையில் பள்ளிக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என முன்பே நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இந்த மூன்று பள்ளிகளைச் பொறுத்தவரையில் ஊதியத்திற்கான செலவு, பள்ளி நிர்வாகச் செலவு, இதர சில்லரைச் செலவுகள் உள்பட அனைத்து செலவுகளும் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. அதன் காரணமாக இப்பள்ளிகள் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளின் மூலமாக ஆசிரியர், அலுவலர்களின் ஊதியம் தப்பட்டிருந்தும் ஊதியச் செலவு முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே இந்த மூன்று பள்ளிகளும் உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிகளின்படி தயாரிக்கப்பட்ட விவரப்பட்டியலை பள்ளி கட்டண நிர்ணயக்குழுவிற்கு 4 வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும், பள்ளி கட்டண நிர்ணயக்குழு உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிகளின்படி மீண்டும் புதிதாக கட்டண கோரிக்கையை பரிசீலித்து மூன்று மாதத்திற்குள் புதிய பள்ளி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் பள்ளிகள் தரப்பில் வழக்குரைஞர் பி.நாகராஜூ, அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜரானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.