முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓமக்குளத்தில் 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறைகேணி: தொல்.திருமாவளவன் எம்பி பார்வையிட்டார்

நந்தனார் ஹோமம் வளர்த்து சிவபெருமானுடன் ஐக்கியமான இடத்தில் வெட்டப்பட்ட சிதம்பரம் ஓமக்குளத்தில் (ஹோமக்குளம்) கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு செம்மண் உறை கேணிகளை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

நந்தனார் ஹோமம் வளர்த்து சிவபெருமானுடன் ஐக்கியமான இடத்தில் வெட்டப்பட்ட சிதம்பரம் ஓமக்குளத்தில் (ஹோமக்குளம்) கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு செம்மண் உறை கேணிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாயன்மார்களின் ஒருவரான நந்தனார் சிவபெருமானை தரிசிக்க ஹோமம் வளர்த்து தீயில் கலந்து சிவபெருமானுடன் ஐக்கியமானதாக பெரியபுராணம் வரலாறு கூறுகிறது. அச்சிறப்பு வாய்ந்த சிதம்பரம் ஓமக்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுடுமண் உறைகேணிகள், 17-ம் நூற்றாண்டு செம்மண் உறை கேணிகள் ஆகியவற்றை தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை பார்வையிட்டார். அப்போது குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இந்து ஆலய பாதுகாப்புக்குழு தலைவர் மு.செங்குட்டுவனிடம் உறைகேணிகள் விபரம் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பத்தினருக்கு தொல்.திருமாவளவன் எம்பி வேட்டி, சேலை, மற்றும் நிவாரணத் தொகை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன் (கடலூர் தெற்கு), வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன் (கடலூர் மேற்கு), அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் பாலஅறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் பேரறிவாளன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் முத்தையன், சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆதிமுலம், ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், இளவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.