முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓரே மேடையில் விவாதிக்கும் அளவுக்கு நாராயணசாமி புதுவைக்கு எதுவும் செய்யவில்லை: ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடந்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

ஓரே மேடையில் விவாதிக்கும் அளவுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவை மாநிலத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடந்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறை ஆட்சி மாற்றம் வேண்டும் என புதுவை மக்கள் விரும்பினர். அதே போல் தற்போது எம்.பி. மாற்றம் வேண்டும்.

கடந்த முறை புதுவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யானார் நாராயணசாமி. மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஒரே மேடையில் அவருடன் நான் விவாதிக்கும் அளவுக்கு எவ்வித நன்மையும் நாராயணசாமியால் புதுவைக்கு கிடைக்கவில்லை.

ரயில் விட்டதாகவும், காரைக்காலில் என்ஐடி கொண்டு வந்ததாகவும் நாராயணசாமி கூறுகிறார். இதெல்லாம் அவரது முயற்சியால் வரவில்லை. இதற்காக கடிதம் எழுதி மத்திய அரசிடம் கேட்டு பெற்றது நான்தான். இதற்கு ஆதாரமாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களை வைத்துள்ளேன்.

புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் வேலை கிடைக்கும் வகையில் தொழிற்சாலை கொண்டு வரவில்லை. பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை வரவிடாமல் தடுத்தவர் நாராயணசாமி. புதுவைக்கு வரவேண்டிய பல திட்டங்களை தடுத்து நிறுத்தியது அவரது சாதனை.

மாநில அரசாகிய நாங்கள் மத்திய அரசிடம் கேட்ட நிதியை விட கூடுதலாக அவர் நிதி பெற்று தந்திருக்க வேண்டும். அதற்காகதான் அவரை புதுவை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், எம்பி நிதியை கூட அவர் சரியாக செலவு செய்யவில்லை.

புதுவைக்கு தானே புயல் நிவாரணமாக மத்தியஅரசு ரூ. 125 கோடி அறிவித்தது. ஆனால், ரூ. 75 கோடிதான் தந்தது. மீதமுள்ள ரூ. 50 கோடியை பெற்று தர நாராயணசாமி முயற்சி எடுக்கவில்லை. புயலில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு செய்த உதவியை தடுத்து நிறுத்தினார்.

தனி மாநில அந்தஸ்து

மத்திய அரசு அனுமதி தராமல் நாம் எவ்வாறு கடன் பெற முடியும். இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வாகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஆனால், அதற்கும் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஏட்டிக்கு போட்டியாக பேசும் அவரால், புதுவைக்கும், மக்களுக்கும் எவ்வித பயனும் இல்லை.

மத்திய அரசு மாற வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் உள்ளது. மக்களின் ஆதரவுடன் பா.ஜ.க வென்று ஆட்சியை பிடிக்கும். வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வென்று எம்.பி.யாக சென்றால்,  மத்திய அரசு உதவியுடன் புதுவையில் வரும் 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை தர முடியும்.  மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் உறுப்பினர்தான் நமக்கு அவசியத்தேவை என்றார் ரங்கசாமி.

புதுவைக்கு யார் அதிக நன்மைகள் செய்துள்ளனர் என ஓரே மேடையில் விவாதிக்கத்தயாரா என மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமிக்கு சவால்விட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு முதல் முறையாக நேரடியாக பதில் அளித்துள்ளார் முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.