பழனி-கொடைக்கானல் சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்து 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்து சுமார் ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்து சுமார் ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவது கொடைக்கானல். கொடைக்கானலுக்கு தரைப்பகுதியில் இருந்து செல்ல பழனி-கொடைக்கானல் மலைப்பாதையும், வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையும் பயன்பாட்டில் உள்ளது. இதில் பழனி-கொடைக்கானல் பாதையில் அதிக கொண்டைஊசி வளைவு, பசுமைப்பள்ளத்தாக்கு, இயற்கைக் காட்சிகள் அதிகமாக உள்ளதால் இப்பாதையை அதிகமான பயன்பாட்டில் உள்ளது. தற்போது தமிழக அரசு சுற்றுலாப்பயணிகள் மேம்பாட்டிற்காக பெருமாள்மலை முதல் சவரிக்காடு வரையிலான தூரத்தை சுமார் ஐந்து கோடி மதிப்பில் சீரமைக்க உத்திரவிட்டுள்ளது. கோடைவிடுமுறை வரவுள்ள நிலையில் இப்பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை சூலூரை சேர்ந்த லாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சாலைப்பணிக்காக ஜல்லிக்கற்கள் கொண்டு சென்ற டிப்பர் லாரி கற்களை கொட்டி திரும்பி வரும் போது நான்காவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து மூன்றாவது கொண்டை ஊசி வளைவருகே விழுந்தது. அவ்வழியே வந்தவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்புப் படைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் லாரியில் பலத்த காயங்களுடன் இருந்த மூலனூரை சேர்ந்த ஓட்டுனர் பாலு(25), திருச்சியை சேர்ந்த கிளீனர் ராமு(27) ஆகியோரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டம் நடத்தியும் லாரியை நகர்த்த முடியாததால் பழனியில் இருந்து கிரேனை வரவழைத்து லாரியை ஓரமாக வைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். போக்குவரத்தை சீரமைக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்(யுகாதி பண்டிகை)கிழமை என மூன்று நாட்கள் தொடர்விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் அவதிக்கு ஆளாகினர். சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் என பலரும் மீட்புப்பணிகள் மேற்கொண்ட நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை.
புதன்,வியாழன் போக்குவரத்து தடை:
பழனி-கொடைக்கானல் சாலையில் பல கி.மீ தூரம் புதிய தார்சாலைப் பணிகள் நிறைவு நிலையில் குறிப்பிட்ட பெருமாள்மலை முதல் சவரிக்காடு இடையிலான 5 கிமீ தூரத்திற்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தார்சாலை பணி நடைபெறவுள்ளது. அதிக வளைவுகள் உள்ள இப்பகுதியில் கனரக வாகனங்கள் பிரேக் பிடித்து திரும்பும்போது புதிய தார்சாலை பெயர்ந்து விடும் என்பதால் புதன்,வியாழன் இருநாட்களுக்கு இப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் வத்தலக்குண்டு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இந்தசாலைப் பணியை பணிப்பழு காரணமாக பழனி நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு செய்து வருகிறது. பள்ளிக்குழந்தைகள், விவசாயிகள் ஆகியோர் பாதிக்காவண்ணம் அரசு, பள்ளி பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடையில்லை என பழனி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.