விருதுநகர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசாரம், ஊர்வலம் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஒலி அமைப்பு மற்றும் வாகனம் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மக்களவை தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனால், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் அடிப்படையிலும், விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது இருக்கிறது. எனவே தேர்தல் பிரசாரங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகள் அமைப்பதற்கும் சிறப்பு குழு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இது போன்றவைகளுக்கு அனுமதி அளிப்பதற்காகவே பல்வேறு துறையின் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
இக்குழுவின் பொறுப்பாளராக விருதுநகர் வட்டார காவல் துறை துணைக்கண்காணிப்பாளர்(தேர்தல்) ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் நகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைப்பு குழு அலுவலராக விருதுநகர் நகராட்சி பொறியாளரும், ஊராட்சி பகுதிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர்(கிராம ஊராட்சிகள்) ஆகியோர் இருப்பர். ஒருங்கிணைப்பு அலுவலர்களாக விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலரும், மின்சார வாரிய உதவி நிர்வாக பொறியாளரும், மண்டல போக்குவரத்து அலுவலரும் செயல்பட இருக்கிறார்கள்.
அதனால், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள், வாகனங்கள் மற்றும் ஒலி பெருக்கிகள் அமைக்க சிறப்பு குழுக்களிடம் மனுக்கள் அளித்து அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.