முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். ஏப்.13 தேரோட்டம்.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:56 AM
பகிர்:

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசமும் மற்றும் பங்குனி உத்திரத்திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.  தைப்பூசம் நிறைவுற்ற நிலையில் திங்கள்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவீதியில் கிராமசாந்தி பூஜை, வாஸ்துசாந்தி பூஜை ஆகியன நடைபெற்றது.

திங்கள்கிழமை  காலை அருள்மிகு குழந்தை வேலாயுத சாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சோடஷ அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு மயூரயாகம் நடத்தப்பட்டது. சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானை முன்னே செல்ல கோயிலை சுற்றி கொடி வலம் வர செய்யப்பட்டு தங்கக் கொடிமரத்தடிக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புகட்டப்பட்டது.  

தங்ககொடி மரம் முன்பு  மண்டபத்தில் வேதம், ஆகமம், திருமுறை பாடல்கள் பாடப்பட்டு கொடிப்பண் பாடலுடன் தங்கக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. 

புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கொடியேற்றம் முடிந்த பின் கொடியேற்ற இடத்துக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமணிய குருக்கள்,  சந்திரமவுலீஸ்வர குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர்.  

10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரடாசாமி தந்தசப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா,  தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா எழுந்தருள்கிறார்.   வரும் ஏப்.12ம் தேதி இரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டமும், ஏப்.13ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.  ஏப்.16 அன்று திருக்கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது. 

கொடியேற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ., வேணுகோபாலு, ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி,  கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், டிஎஸ்பி., சண்முகசுந்தரம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம்,  பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா,  சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாதஸ்டால் ஹரிஹரமுத்து,  திருப்பூர் லாட்ஜ் மகேஷ்குமார், காண்ட்ராக்டர் நேரு, சங்கராலயம் பாலசுப்ரமணியசாமிகள், புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.