முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமாவளவனுக்கு மோதிரம் சின்னத்தை தேர்வு செய்த, அவரது தாயார்!

சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:56 AM
பகிர்:

சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் நடச்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறை நட்சத்திரம் சின்னம் தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தாக்கல் செய்தார். கட்சி அங்கீகாரம் இல்லாததால்,  நட்சத்திரம் சின்னத்தை குறிப்பிடாமல்,  அவருக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து ஒதுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.  இந்நிலையில் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஏப்.4-ம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் தொகுதி தேர்தல் அதிகாரியுமான சரவணவேல்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது சுயேட்சை சின்னங்கள் பட்டியல் அவருக்கு வழங்கப்பட்டு தேர்வு செய்யுமாறு தெரிவித்தனர். திருமாவளவன் டிவி சின்னத்தை மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் டிவி சின்னமும், ஏர்-கண்டிஷனர் சின்னமும் ஒரே மாதிரியாக இருந்ததால், குழப்பத்தில் வேட்புமனு தாக்கலுக்கு வந்த தனது தாயார் பெரியம்மாளிடம் ஏர்-கண்டிஷன் சின்னத்தை காண்பித்து இது என்ன சின்னம் எனக்கேட்டுள்ளார். அதற்கு அவர் டிவி எனக்கூறியுள்ளார். உடனே அருகிலிருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  யாராவது ஏர்-கண்டிஷனர் சின்னத்தை வாங்கி வந்துவிட்டார், குழப்பம் ஏற்பட்டு வாக்குகள் பிரிந்துவிடும் என வேறு சின்னத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்.

Advertisement

உடனே திருமாவளவன், தனது தாயார் பெரியம்மாளிடம் கொடுத்து வேறு சின்னம் ஏதாவது உள்ளதா என பார்த்து சொல்லுமாறு கூறினார். அவர் பட்டியலை பார்த்துவிட்டு மோதிரம் எளிமையான சின்னமாக உள்ளது. இதனை தேர்வு செய் எனக்கூறினார்.  உடனே திருமாவளவன், தனது தாயார் தேர்வு செய்த மோதிரம் சின்னம் கோரி தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.

இதேபோல் மறுதினம் ஏப்.5-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமாரும், மோதிரம் சின்னம் கோரி வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரு கட்சி, இரு இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட கோரியுள்ளதால், யாரும் கேட்காததால்  முன்னுரிமை அடிப்படையில் மோதிரம் சின்னம் வழங்கப்படும் எனத் தெரியவருகிறது.

வேட்புமனுவிற்கு டெபாசிட் தொகை வழங்கிய தாயார்: திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ரூ.12500 டெபாசிட் தொகை கட்ட வேண்டும். இந்த டெபாசிட் தொகையை,  நான் தான் கட்டுவேன் எனக்கூறி, திருமாவளவன் வரும் போது வழங்கிய தொகையை சேர்த்து வைத்து எடுத்து வந்து கொடுத்ததை கண்டு அனைவரும் நெகிழ்ந்தனர். அதில் ரூ.11500 தான் இருந்தது. பின்னர் ரூ.ஆயிரம் சேர்த்து, ரூ.12500 தொகையை டெபாசிட்டாக கட்டினார் திருமாவளவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments