விருதுநகர் : பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசுகையில், மக்களவை தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. அதற்கிடையே ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கான பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட இருக்கிறது.
இம்மக்களவை தொகுதியில் 183 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 50 சதவீத வாக்குச் சாவடி மையங்களில் மத்திய பாதுகாப்பு படையினரையும், 50 சதவீத மையங்களில் நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப்காஸ்டிங் மூலம் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
Advertisement
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கோட்டாட்சியர்கள் மணிவண்ணன்(சிவகாசி), உதயகுமார்(அருப்புக்கோட்டை), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், நேர்முக உதவியாளர்(தேர்தல் பிரிவு) பவானி ஜீஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.