முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கூறி சாலைமறியல்

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் பல்வேறு கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க இலவசங்கள், பணத்தை தர கட்சியினர் எப்போது வருவர் என்றும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

பழனி அருகே மானூரில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி தேமுதிக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் பல்வேறு கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க இலவசங்கள், பணத்தை தர கட்சியினர் எப்போது வருவர் என்றும் பல்வேறு எதிர்பார்ப்பில் உள்ளனர்.  இந்நிலையில் கட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்க்கட்சியினர் செயலை கழுகுக் கண்களுடன் கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் பழனி அருகே மானூரில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கூறி பழையதாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானோர் கூடி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருவாய் துறையினரும், போலீஸாரும் வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்ட பெண்கள் சிலர் கூறுகையில், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா திண்டுக்கல் வந்த போது நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள எங்களை போன்றவர்களை பணம், பிரியாணி தருவதாக கூறி கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்.  அங்கு வெயிலில் வாடி பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்நிலையில் தற்போது பிரச்சாரத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் எங்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறுகையில், மானூர் அதிமுக கிளை செயலாளரும், ஊராட்சி தலைவருமான முருகேசன் தோட்டத்தில் ஏராளமானோருக்கு சாப்பாடு போடப்பட்டும், பணம் பட்டுவாடா செய்யும் பணியும் நடைபெறுகிறது.  இதற்கு நூறுநாள் வேலை செய்வோரை உடன் வைத்துள்ளனர்.  இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரண்பாடானது என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மறியல் முயற்சியை கைவிட செய்த தேர்தல் கண்காணிப்பு வட்டாட்சியர் லட்சுமி மற்றும் போலீஸார் முருகேசன் தோட்டத்துக்கு சென்ற போது அங்கு ஏராளமான அதிமுகவினரும், மற்றொரு பகுதியில் நூறுநாள் வேலை செய்யும் பெண்களும் இருந்தனர்.  வேலை செய்வோரிடம் விசாரித்த போது வேலை செய்து விட்டு ஓய்வுக்காக அமர்ந்திருப்பதாகவும், கட்சியினரிடம் கேட்டபோது தேர்தல் ஆலோசனை செய்வதாகவும் தெரிவித்தனர்.  மேலும் அங்கு சோதனை மேற்கொண்ட போது சாப்பாடோ, பணமோ ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.  இதனால் செவ்வாய்க்கிழமை மானூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.