திமுக கொண்டு வந்த மின் திட்டங்களை செயல்படுத்தாததே மின்வெட்டுக்கு காரணம் : சற்குணபாண்டியன்
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் மின்தடைக்கு காரணம் என திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் மின்தடைக்கு காரணம் என திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
விருதுநகர் நகராட்சி நெல்லுக்கடை மைதானத்தில் புதன்கிழமை நடந்த தெருமுனைப்பிரசார கூட்டத்தில் திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் பங்கேற்று பேசியதாவது: தென்தமிழகம் பயனடையும் வகையிலும் அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். அத்திட்டத்தின் தொடக்க விழா மதுரையில் நடைபெற்ற போது, அதில் வைகோ பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசினார். அதையடுத்து, அப்பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக கூறி பா.ஜ.கவினர் திட்டத்தை முடக்கினர். தற்போது, பா.ஜ.கவுடன் வைகோ சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டு தடம் மாறி பேசி வருகிறார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மின்திட்டங்களை தொடர்ந்து அதிமுகவினர் செயல்படுத்தவில்லை. இதுபோன்ற காரணங்களால் தான் அதிக நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் பாதிப்படைந்துள்ளனர். அதோடு, அவர்களின் வாழ்வாதரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை கலைஞர் நிறைவேற்றி தந்தார். மேலும், நிறைய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்தார். தற்போது, தமிழகத்தில் அமைதியாக இருப்பதாக முதல்வர் தெரிவித்து வருகிறார். தனியாக நடந்து செல்லும் பெண்களை வழிமறித்தும், காலையில் கோலம் போடும் போதும் தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவம் அதிகரித்து வருகிறது.
Advertisement
இதுவரையில் விருதுநகர் நகராட்சி பகுதியில் விலையில்லா பொருள்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்றவைகளை பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதனால், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரத்தினவேலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பொதுமக்களை அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் தெரிவித்தார்.