நடராஜர் கோயிலில் தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டிய திருமாவளவன்
திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு புதன்கிழமை சென்று சாமி கும்பிட்டு, அங்குள்ள தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டினார்.
திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு புதன்கிழமை சென்று சாமி கும்பிட்டு, அங்குள்ள தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டினார்.
முன்னதாக கிழக்கு கோபுர வாயிலில் தொல்.திருமாவளவனை பொதுதீட்சிதர்கள் சால்வை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர். திருமாவளவன் சிற்றம்பல மேடையில் ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசித்தார். பொதுதீட்சிதர்தள் சிறப்பு தீபாராதனை செய்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து சாமி பிரசாதத்தை வழங்கினர். பின்னர் திருமாவளவன் கோயில் பொதுதீட்சிதர்களின் அலுவலகத்திற்கு சென்று தீட்சிதர்களின் கமிட்டி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார். பின்னர் கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்தை எழுதி கையொப்பமிட்டார்.
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 2004, 2009 ஆகிய தேர்தல்கள் போது நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு ஆதரவு திரட்டினேன். தீட்சிதர்கள் என்னை அழைத்துச்சென்று தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கினர். அதேபோன்று இத்தேர்தலிலும் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு, ஆதரவு திரட்ட வந்தேன். தீட்சிதர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைத்தனர். உறவுகள் மேம்பாட்டிற்கும், மனிதநேயத்திற்கும் ஆன்மீகம் அடிப்படையாக திகழ்கிறது. அதனடிப்படையில் நான் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டேன். அனைத்து கோயில்களையும் அரசுடமையாக்க வேண்டும் என போராடி வந்தேன். அந்த வகையில் நடராஜர் கோயிலை அரசு ஏற்ற போது ஆதரவு தெரிவித்தேன். எனக்கு தீட்சிதர்களுக்கும் இடையே தணிப்பட்ட முறையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என திருமாவளவன் தெரிவித்தார்.
Advertisement