போலீஸாரை கண்டித்து காய்கறி வியாபாரிகள் மறியல் போராட்டம்
விருதுநகர் பஜாரில் காய்கறி ஏற்றி வந்த லாரியிலிருந்து சரக்குகளை இறக்கவிடாமல் தடுத்த போலீஸ்காரர்களை கண்டித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் பஜாரில் காய்கறி ஏற்றி வந்த லாரியிலிருந்து சரக்குகளை இறக்கவிடாமல் தடுத்த போலீஸ்காரர்களை கண்டித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் பஜார் சாலையில் மார்க்கெட், காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல், இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதனால், இரவு 9 மணி முதல் காலை 8 மணிவரையில் காய்கறிகள், பலசரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் ஆகியவை உள்ளே வந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட நேரத்திற்குள் வியாபாரிகளும் பல்வேறு சரக்குகளை இறக்கிக் கொள்ள வேண்டும். அதையடுத்து, போக்குவரத்து வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இந்நிலையில் காய்கறி லாரி காலையில் 10 மணிக்கு பஜார் சாலையில் வந்தது. அப்போது, போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் வழிமறித்துள்ளார். அதோடு, இந்நேரத்திற்கு உள்ளே செல்லக் கூடாது என தடுத்து திரும்பிச் செல்லும் படி கூறியுள்ளார். அதிகாலையில் வரவேண்டிய நிலையில் லாரியில் பழுது ஏற்பட்டதாகவும், அதை நீக்கிவிட்டு வருவதற்குள் தாமதம் ஆகிவிட்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த வியாபாரிகள் உடனே காய்கறிகளை இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரவீந்திரபூபதி விரைந்து வந்தார். அப்போது, வியாபாரிகள் லாரி பழுது காரணமாகவே தாமதமாக வந்துள்ளது. அதனால் சரக்குகளை உடனே இறக்கி விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்கறிகளை இறக்கி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளும் படி கூறி காவல் ஆய்வாளர் சமதானம் செய்தார். அதையடுத்து மறியலை கைவிட்டுச் சென்றனர்.
இதனால், அப்பகுதியில் அரை மணிநேரம் வரையில் பிரசாரத்திற்கு செல்லும் அரசியல் கட்சியினர் மற்றும் வாகனங்கள் ஆகியவை செல்ல முடியாத நிலையேற்பட்டது. பஜார் சாலையில் திடீரென நடந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.