பழனியில் சூட்கேஸ் வெடிகுண்டு புரளியால் சுமார் 15 மணி நேரம் பரபரப்பு
பழனி காந்தி மார்க்கெட் பரபரப்பான பகுதியாகும். இங்கு வியாழக்கிழமை இரவு நீண்ட நேரமாக சிமெண்ட் நிறத்திலான சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில்
பழனியில் சூட்கேஸ் வெடிகுண்டு புரளியால் சுமார் 15 மணி நேரம் ஏற்பட்ட பரபரப்பு கடைசியில் வெறுமனே முடிந்தது.
பழனி காந்தி மார்க்கெட் பரபரப்பான பகுதியாகும். இங்கு வியாழக்கிழமை இரவு நீண்ட நேரமாக சிமெண்ட் நிறத்திலான சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்த நிலையில் யாரும் கோராததால் இதுகுறித்து பழனி டவுன் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் சூட்கேஸை கைப்பற்றி கொண்டு சென்ற நிலையில் அது சூட்கேஸ் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற புரளி பரவியதால் போலீஸார் திறக்க மேற்கொண்ட முயற்சி கைவிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு கொடுத்த தகவலைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் திறந்து பார்க்க அறிவுறுத்தப்பட்டது.
உடனடியாக இரவு 9மணியளவில் சூட்கேஸை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியன நிறுத்தப்பட்டு போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். காலை 10 மணியளவில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தாவூத்ராஜா, பாண்டி ஆகியோர் வந்தபின் சூட்கேஸ் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சூட்கேஸ் கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள வரண்டுபோன குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வந்ததால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அங்கு நிபுணர்கள் சூட்கேஸை திரி போன்ற கயிரால் கட்டி சிறியரக குண்டை வெடிக்க செய்ததன் மூலம் திறக்க செய்தனர்.
சுமார் 50அடி உயரத்துக்கு மேலே சென்று திறந்து விழுந்த சூட்கேஸில் பெண்ணின் உடைகள் மட்டுமே இருந்தன. மேலும் கிரேஸ்மார்ட்டினா, கோவை நிர்மலா கல்லூரியில் பிஎஸ்சி., கணிதம் பயிலும் செல்வராஜ் பாண்டியன் மகள் கிரேஸ்மார்ட்டினா என்பவரது மார்க்சீட், டி.சி., ஆகியனவும் இருந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், திருடர்கள் மேற்கண்ட பெண்ணின் பயணத்தின்போது சூட்கேஸை திருடி அதில் இருந்த பொருட்களை திருடிவிட்டு சூட்கேஸை விட்டு சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 15 மணி நேர பரபரப்பு வெறுமனே முடிவுக்கு வந்தது.