முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக, பாஜக ரகசிய உடன்பாடு வைத்துள்ளது: தொல்.திருமாவளவன்

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக, பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:03 AM
பகிர்:

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக, பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் சனி மூலையில் உள்ள காரியபெருமாள் கோயில் தெரு காமுட்டி கோயிலில் சாமி கும்பிட்டு, நகரில் வாக்கு சேகரிப்பதை திங்கள்கிழமை தொடங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் தொகுதியில் தலித் மற்றும் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் பல வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டுள்ளோம். அதனை தொகுத்து தேர்தலை ஆணையத்தில் புகார் கொடுத்து, அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பு கேமரா அமைக்கவும் வலியுறுத்தவுள்ளோம். மேலும் ஆளும்கட்சிக்கு போலீஸார் ஒத்துழைப்பு அளிப்பதையும் தேர்தல் ஆணையர் பிரவீன்குமாரிடம் தெரிவிக்கவுள்ளோம். தோல்வி பயம் கண்ட எதிர்கட்சியினர் எனக்கெதிராக துண்டறிக்கை வெளியிட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்படுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசும், தேர்தல் ஆணையமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரு தினங்களாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர்  ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். சில இடங்களில் மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஒரு சில இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்போடு பணம் வழங்கப்படுகிறது. எனவே தேர்தல் ஆணையம் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். காவல்துறையினரையும் கண்காணிக்க வேண்டும். பெரும்பான்மையான வாக்கு சாவடிகளை கைப்பற்ற சிலர் ஈடுபட உள்ளதாக தகவல் வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளிலும், தலித், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிகளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு, குடிநீர் பிரச்சனை பிரதான குறைகளாக உள்ளன. சிதம்பரம் தொகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது. திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவனுடன் சிதம்பரம் நகர திமுக செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், மாவட்ட கலை, இலக்கிய பிரிவு செயலாளர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், நகரமன்ற உறுப்பினர்கள் ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர் சென்று நகரில் 33 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.