பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி: இந்திய கம்யூனிஸ்ட்
நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்
நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த தேர்தல் துறை எடுத்தும் வரை நடவடிக்கைகளை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றன. இதைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது.
பணம் விநியோகம் தொடர்பாக தேர்தல் ஆணைய தொலைபேசி தகவல் தெரிவித்தும், அவர்கள் வருவதற்குள் பணம் தந்தவர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்நடவடிக்கை போதுமானதல்ல.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் இடதுசாரி கூட்டணி கட்சியினர் சார்பில் பிரசாரம் செய்தோம். 50 ஆண்டுகளுக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடுவது மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் மக்கள் ஏழ்மையில் வாடுகின்றனர். இளைஞர்கள் வேலையில்லாமல்திண்டாடி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடையவில்லை.100 நாள் வேலை திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதற்கு காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்.
வர்த்தக நிறுவனங்கள் மத்திய அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள திட்டமிட்டு செயல்படுகின்றன. இதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் அரசின் ஊழலையும், பா.ஜ.கவின் மதவாதத்தையும் மக்கள் வெறுக்கின்றனர்.எனக்கு ஆதரவாக கடந்த பல நாள்களாக பிரசாரம் செய்து ஆதரவு திரட்டிய இடதுசாரி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார் விசுவநாதன்.