பாலாறு அணையில் மீன்திருட்டை தடுக்க மோட்டார்படகு
பழனி பாலாறு அணையில் மீன்திருட்டை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு பணிக்காக மோட்டார்படகு வரவழைக்கப்பட்டுள்ளது.
பழனி பாலாறு அணையில் மீன்திருட்டை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு பணிக்காக மோட்டார்படகு வரவழைக்கப்பட்டுள்ளது.
பழனியை அடுத்தது பாலாறு பொருந்தலாறு அணைக்கட்டு. திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணைக்கட்டான இது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்குவதோடு மட்டுமன்றி பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்த அணையின் உட்பகுதியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் கட்லா, ரோகு, திலோப்பியா உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் சுமார் 600கிலோ மீன்கள் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
மீன்பிடிக்க 32 பரிசல்களும், அதிகாரபூர்வமான 32 மீனவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அணையின் உட்பகுதியில் சமீப காலமாக ஏராளமான மீன்கள் திருட்டுவலை மூலம் திருடப்பட்டதைத் தொடர்ந்து மீன் திருட்டை தடுக்க புதிதாக மோட்டார் படகு வரவழைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளர்ச்சி அலுவலர் பாண்டியன் தெரிவித்ததாவது, அணைப்பகுதியில் மீன்வளத்துறை மூலம் மீன்கள் வளர்த்தப்பட்டு மீனவர்களை கொண்டு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக மர்மநபர்களால் இரவு நேரங்களில் வலைகளில் உள்ள மீன்கள் பிடிக்கப்படுவதோடு, திருட்டு வலையும் விரிக்கப்படுகிறது. போலீஸாரிடம் பலமுறை புகார் செய்தும் தடுக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் மீன்திருட்டை தடுக்க உயர்அதிகாரிகள் மூலம் அமராவதி அணையில் இருந்து மோட்டார்படகு வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு பெருமளவு தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.