அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மிதமான மழையால் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மிதமான மழையால் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் திங்கள்கிழமை மேலும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணையில் 3 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 14 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 10 மி.மீ மழையும் பெய்துள்ளது.
நீர்வரத்து குறைந்து காணப்பட்ட பாபநாசம் அணைக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 2200 கனஅடி நீா்வரத்து இருந்தது. இதையடுத்து அணையின் நீ்ர்மட்டம் 2.05 அடி உயர்ந்து 62.70 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 77.51 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.46 அடியாகவும் இருந்தது.
இதேபோல் கடனாநதி அணையின் நீர்வரத்து 240 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 63.50 அடியாக இருந்தது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 67 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 65.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 32.48 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 94.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 79 கனஅடி நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையில் இருந்து 1105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 55 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.