முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடங்குளம் 2 ஆவது அணு உலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம்: வளாக இயக்குநர் தகவல்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆவது அணுஉலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது என்றார் வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:32 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆவது அணுஉலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது என்றார் வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற அணுஅறிவியல் திருவிழாவின் பரிசளிப்பில் பங்கேற்ற ஆர்.எஸ்.சுந்தர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ள 1 ஆவது அணுஉலை அடுத்த வாரம் முதல் மீண்டும் மின்உற்பத்தியைத் தொடங்க வாய்ப்புள்ளது. அணுஉலை இயங்கத் தொடங்கிய 48 ஆவது மணி நேரத்தில் தனது முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட்டை எட்டும். இதுவரை கூடங்குளத்தில் இருந்து 262 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அது ஒரு யூனிட் ரூ.1.22 வீதம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான மின்உற்பத்திக்கு, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகாரம் அளிக்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனுமதி கிடைத்ததும் உற்பத்தி தொடங்கினால், ஒரு யூனிட் ரூ.3.50-க்கு மேல் விற்பனை செய்யப்படும். இந்தத் தொகை சற்று கூடுதலாக தெரியலாம். 2007 ஆம் ஆண்டிலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு பிரச்னைகளால் தாமதமானது. இந்தத் தாமதத்தால் அணுமின்நிலையத்தை உருவாக்குவதற்கான செலவு 2 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவினாலும் மின்சாரத்தின் விலை சற்று உயர்வாகும் நிலை உள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 2 ஆவது யூனிட்டில் வெப்பநீர் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதிலிருந்து 3 மாதங்களுக்குள் மின்உற்பத்தியைத் தொடங்க முடியும். 3ஆவது மற்றும் 4 ஆவது அணுஉலைகளை அமைப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனுமதி உள்ளிட்ட பணிகள் முடிந்தால் சுமார் 5 முதல் 6 ஆண்டுகளில் அந்த அணுஉலைகளைக் கட்டி முடிக்க வாய்ப்புள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் கல்வி மாவட்ட அளவிலான அணுஅறிவியல் திருவிழாவும், திருநெல்வேலியில் வருவாய்மாவட்ட அளவிலான திருவிழாவும் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 230 பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு அறிவியல் படைப்பு தயாரிப்பு, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

முன்னதாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →