காதலை ஏற்க மறுத்த பெண் போலீஸை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற போலீஸ்காரர்
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் பணி செய்து வரும் பெண் காவலர் தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காவலர் அவரை கழுத்தை
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் பணி செய்து வரும் பெண் காவலர் தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காவலர் அவரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் அனுஷா (22). இவர் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை 9 ஆம் அணியில் காவலராக பணி செய்து வருகிறார். நான்குனேரி அருகே பருத்திப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரராஜா (25). இவரும் 9 ஆம் அணியில் காவலராக பணி செய்து வருகிறார்.
ராமச்சந்திரராஜா, அனுஷாவை காதலித்து வந்தாராம். தனது காதலை அனுஷாவிடம் தெரிவித்தாராம். ராமச்சந்திரராஜாவின் காதலை அனுஷா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே வியாழக்கிழமை இரவு அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த அனுஷாவை, ராமச்சந்திரராஜா சந்தித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினாராம்.
அனுஷா மறுப்புத் தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ராமச்சந்திரராஜா கையில் துணியால் அனுஷாவின் கழுத்தில் போட்டு நெரித்தாராம். அனுஷா சத்தம் கேட்டு அருகில் அறையில் இருந்த காவலர்கள் ஓடிவந்தனர்.
ராமச்சந்திரராஜா, அனுஷாவை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றது தெரியவந்தது.
ராமச்சந்திரராஜா தப்பி ஓடிவிட்டார். மயக்கமடைந்த அனுஷா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அனுஷா அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கனகராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். காதலை ஏற்க மறுத்த பெண் காவலரை காவலரே கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.