பாளையங்கோட்டையில் விபத்து: கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி சாவு
பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4 ஆவது நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது சென்னையில் வசித்து வரும் இவர், தியாகராஜநகரில்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை தியாகராஜநகரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி கட்டுமான தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் 4 ஆவது நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது சென்னையில் வசித்து வரும் இவர், தியாகராஜநகரில் உள்ள தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்தாராம். அதன்படி ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்கட்டமாக வீட்டினை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள அனந்தநம்பிக்குறிச்சி மேலத்தெருவைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் முத்துமாலை (60), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வியாழக்கிழமை மாலையில் சிமென்ட் சிலாப் ஒன்றை இடிக்கும்போது அது சரிந்து முத்துமாலை மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினர். ஆனால், முத்துமாலை சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
உயிரிழந்த முத்துமாலைக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.