பழனியருகே டிரைவரை தாக்கி மர்மகும்பல்: கார் கடத்தல்
தேனி மாவட்டம் விஸ்வதாஸ் புரம், கே.ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் மொக்கையதேவர் மகன் முத்துச்சாமி(55). இவர் சொந்தமாக வாடகைக்கார் வைத்து இவரே டிரைவராகவும் வேலை செய்து
பழனி அருகே மர்ம கும்பல் கார் டிரைவரை தாக்கி காரை கடத்தி சென்றது.
தேனி மாவட்டம் விஸ்வதாஸ் புரம், கே.ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் மொக்கையதேவர் மகன் முத்துச்சாமி(55). இவர் சொந்தமாக வாடகைக்கார் வைத்து இவரே டிரைவராகவும் வேலை செய்து வருகிறார். திங்கள்கிழமை அதிகாலை தேனி புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க நான்குபேர் அவரை அணுகி பழனிக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். மூன்றாயிரம் ரூபாய் வாடகை பேசி காரில் கிளம்பியுள்ளனர்.
காரில் அதன் ஒரிஜினல் ஆர்.சி.புத்தகம், காருக்காக பைனான்ஸில் கட்ட வேண்டிய கடன் தவணை தொகை ரூபாய் இருபத்தையாயிரத்தையும் ஆகியனவும் இருந்துள்ளது. பழனி அருகே கணக்கன்பட்டியை அடுத்த இந்து மேம்பாட்டு மையம் அருகே வந்த போது காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் வாந்தி வருவதாக கூறி காரை நிறுத்தியுள்ளார். கார் நின்றவுடன் நான்கு பேரும் முத்துச்சாமியை துண்டால் கழுத்தை இறுக்கி, கல்லால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்துச்சாமி மயக்கமுற்று கீழே விழுந்தார். உடனடியாக நான்கு பேரும் காரை கடத்தி தப்பி சென்றுவிட்டனர். அவ்வழியே வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தரவே அவர்கள் வந்து முத்துச்சாமியை காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காரின் மதிப்பு சுமார் ஒன்றே முக்கால் இலட்சமாகும்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.