அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிக்கட்டுகளை தயார் செய்த பட்டாசு ஆலைக்கு கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், அந்த ஆலையில் தயாரித்து வைத்திருந்த ரூ. 5லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 5 அறைகளில் சீனிவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், இந்த ஆலையில் அனுமதியில்லாமல் கூடுதலாக கருந்திரிகளையும் தயாரித்து வருவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி தலைமையில் வருவாய் அலுவலர்கள் மற்றும் பந்தல்குடி காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலையில் பட்டாசு ஆலைக்கு திடீர் சோதனைக்குச் சென்றனர். அப்போது, தூரத்தில் காவல் துறையினரின் வாகனங்களை வருவதை அறிந்த தொழிலாளர்கள் உடனே அப்படியே கருந்திரிகளை போட்டு விட்டு தப்பியோடினார்களாம். பின்னர் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ததில் ஒரு அறையில் கருந்திரி கட்டுக்கள் தயாரித்து வைத்திருந்தனர். இது தொடர்பாக 50 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்து பின்னர் தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
இது தொடர்பாக கோட்டாட்சியர் சுபாநந்தினி கூறியதாவது: சீனிவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், இங்கு சட்டவிரோதமாக இங்குள்ள ஒர் அறையில் கருந்திரிகளையும் தயார் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். உடனே அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்ததோடு ஆலைக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து பந்தல்குடி காவல் நிலையத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் நாகலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.