பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு அணையின் பிரதான கால்வாயில் முதல் மற்றும் 2 ஆவது நேரடி குளங்கள் மூலம் பாசனம் பெறும் 10,834 ஏக்கர் நிலங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு அணையின் பிரதான கால்வாயில் முதல் மற்றும் 2 ஆவது நேரடி குளங்கள் மூலம் பாசனம் பெறும் 10,834 ஏக்கர் நிலங்களுக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
தாமிரவருணி பாசனத்தில் மணிமுத்தாறு அணையில் 80 அடி பிரதான கால்வாய் மூலம் முதல், 2,3 மற்றும் 4 ஆவது நேரடியாக அடையும் குளங்கள் வழியாக 24,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பருவ மழை சரிவர பெய்யாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் உயரவில்லை.
கடந்த 2013 இல் குடிநீர் தேவைக்காக மட்டும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனிடையே நிகழ் பருவத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனை தொடர்ந்து பிரதான கால்வாய் மூலம் பாசன நிலங்களுக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதன்படி வியாழக்கிழமை காலை அணையின் 80 அடி பிரதானக் கால்வாயில் தாமிரவருணி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் கே.ஏ. அப்துல்ஹமீது தண்ணீர் திறந்தார்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1030 கன அடி நீர்வரத்து இருந்தது. முதல் கட்டமாக அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான கால்வாய் முதல் ரீச்சில் 67 குளங்கள், 2 ஆவது ரீச்சில் 74 குளங்கள் உள்பட 141 குளங்கள் மூலம் பாசனம்பெறும் 10,834 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இங்கு 121 குளங்கள் நிரம்பியுள்ளன. நிரம்பாத 20 குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் 100 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பாளையங்கோட்டை, நான்குனேரி, அம்பாசமுத்திரம் வட்டங்கள், ஸ்ரீவைகுண்டம் பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.