முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர்,அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழனி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் முருகானந்தம், ஆணையர் முஜிபுர் ரகுமான், நகரமைப்பு அலுவலர் விமலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கூட்டம் துவங்கிய சில நிமிடத்தில் திமுக கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் மகேஸ்வரி சக்திவேல், இந்திரா திருநாவுக்கரசு, மாவடியான் ஆகியோர் தைப்பூசத் திருவிழா வரும் வேளையில் நகராட்சி நிர்வாகம் ரோடுகளை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்து மன்றக்கூட்டம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  இதற்கு ஆதரவு தெரிவித்தும், தனது வார்டில் கடந்த மூன்று வருடங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்து சுயேட்சை கவுன்சிலர் சுப்பிரமணியும் அவர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

13வது வார்டு திமுக கவுன்சிலர் வசந்தா தனது வார்டில் நகராட்சி ஆணையர், தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பலரிடமும் தனது வார்டின் குடிநீர் பிரச்னை, போர்வெல் பிரச்னை குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லாததால் வாயில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பை தெரிவித்தார்.   பின்னர் தலைவர், துணைத் தலைவர், ஆணையரின் சமாதானத்தைத் தொடர்ந்து தர்ணா செய்த கவுன்சிலர்களும், வாயில் துணி கட்டி வந்த கவுன்சிலரும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,  நகராட்சியில் சுமார் மூன்று கோடி மதிப்பில் சாக்கடைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு மராமத்து பணிகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் இதற்கு முன்னாள் ஆணையர் பொறுப்பு வகித்த நகராட்சி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் துணை சென்றுள்ளதாகவும் தெரிவித்து நகராட்சி துணைத் தலைவர் முருகானந்தம், திமுக கவுன்சிலர்கள் முஜிபுதீன், செபாஸ்டியன், பழனிச்சாமி, காங்கிரஸ் கவுன்சிலர் சுந்தர், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்ட பலரும் மன்றக் கூட்டத்தில் நின்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். 

கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் பிளெக்ஸ் போர்டு வைப்பதில் நகராட்சி நிர்வாகம் பணம் கட்ட வருபவர்களை அலைக்கழிப்பதாக புகார் செய்தார்.  நகராட்சி உட்பட்ட வார்டுகளில் குடிநீர், சாக்கடை, மின்விளக்குகள், சாலை வசதிகள் சரியில்லை என் அதிமுக கவுன்சிலர்கள் நிலாபர் குர்ஷித், ஜமீமாபேகம், கணேஷ்வரி நடராஜன், அகிலாண்டம் ஆகியோர் புகார் செய்தனர்.  திருவள்ளுவர் சாலை மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்வோர்  பயன்பாட்டில் உள்ளதால் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும், நகராட்சி மன்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அமரும் இடத்தின் மேலே காரை பெயர்ந்து விழுந்ததுள்ளதை சீரமைக்க வேண்டும் என்றும் கவுன்சிலர் செபாஸ்டின் பேசினார்.

அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் அருகே உள்ள புதிய ரேசன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று காங்கிரஸ் கவுன்சிலர் சுரேஷூம், நகரின் மையத்தில் மிகப்பெரிய நீராதாரமாக உள்ள வையாபுரி கண்மாயில் நகரில் உள்ள விடுதிகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் சுந்தரும் தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.  நகராட்சி எல்கைக்கு உட்பட்ட 10வது வார்டில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட பெஸ்ட் மருத்துவமனையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதற்கு 5வது வார்டில் சுமார் இரண்டரை இலட்சம் செலவில் சாக்கடை கட்டும் திட்டத்துக்கு 5வது வார்டு அதிமுக கவுன்சிலர் குமரேஷ்வரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

விதிமுறை மீறி மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கியதே தவறு, மருத்துவக் கழிவுகளை அவர்களை சொந்த செலவில் அப்புறப்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்துள்ள நிலையில் மக்களின் வரிப்பணத்தை தனியார் மருத்துவமனை நலனுக்காக பயன்படுத்தினால் வார்டு மக்களின் துணையோடு எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார். நகராட்சியில் ஒரு பணிக்காக திட்டம் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அந்த பணியை செய்யாமல் அந்த நிதியை வேறு பணிக்கு செலவிடுவதற்கு மன்றத்திடம் ஒப்புதல் பெறாமல் செய்வதோடு பில்லையும் பாஸ் செய்து விடுவதாக ஏராளமான கவுன்சிலர்கள் பொறியாளரிடம் விவாதத்தில் ஈடுபட்டனர். 

ஆதார் கார்டு குறித்து கவுன்சிலர்கள் கேட்டபோது, நகராட்சியில் தற்போது ஒரு கருவி மூலம் ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஜனவரி மாதம் முதல் இரண்டு கருவிகள் கொண்டு எடுக்கப்படும் என்று தலைவர் வேலுமணி தெரிவித்தார்.  மேலும் பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற ரூ.90 ஆயிரம் மானியம் வழங்கப்படவுள்ளது என ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.