முகப்பு
தற்போதைய செய்திகள்

கேபிள் டிவி சந்தா வசூலுக்கு அரசு ரசீது வழங்க ஆட்சியர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் கேபிள் டிவி மாதச் சந்தாவுக்கு அரசு சார்பில் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீதுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்று கேபிள்

Updated On : 4 பிப்ரவரி, 2014 at 6:31 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:49 AM

தேனி மாவட்டத்தில் கேபிள் டிவி மாதச் சந்தாவுக்கு அரசு சார்பில் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீதுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

        இது குறித்து அவர் கூறியது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் ரூ.70 கட்டணத்தில் கேபிள் டிவி சேவையை கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கி வருகிறது. இதில் ரூ.20-ஐ கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்துகின்றனர். கேபிள் டிவி சந்தாவாக அரசு நிர்ணயித்துள்ள ரூ.70 மட்டும் வசூலிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்தா தொகை வசூலிப்பதற்கான ரசீதுகளை கேபிள் ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ளது.

      மாவட்டத்தில் இம்மாதம்(பிப்ரவரி) முதல் அரசு கேபிள் டிவி நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள ரசீதுகளை மட்டுமே பயன்படுத்தி பொதுமக்களிடம் கேபிள் டிவி சந்தா வசூலிக்க வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேபிள் டிவி சந்தாவுக்கு தனிப்பட்ட முறையில் ரசீதுகளை வழங்கி வசூலிக்கக் கூடாது. முறைகேடுகளில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

    பொதுமக்கள் கேபிள் டிவி சந்தாவுக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.70-ஐ மட்டும் வழங்கி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக சந்தா வசூலிப்போர், வசூல் தொகைக்கு அரசு ரசீது வழங்க மறுப்போர் குறித்து மாவட்ட கேபிள் டிவி வட்டாட்சியர் செல்போன் எண்:94980 02588, 97505 65906 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இது குறித்த புகார்களை arasucabletvcorpgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம். தொலைபேசி எண்:044-28221233 மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 044-28253021 என்ற எண்ணுக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.