காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வாக்களிப்போம்: அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன்
புதிய பென்ஷன் திட்டம், தினக்கூலி வேலை, தொகுப்பூதியத்தில் ஊழியர்கள் தேர்வு உள்ளிடவற்றை கண்டித்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வாக்களிப்போம் என அகில இந்திய மாநில அரசு
புதிய பென்ஷன் திட்டம், தினக்கூலி வேலை, தொகுப்பூதியத்தில் ஊழியர்கள் தேர்வு உள்ளிடவற்றை கண்டித்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வாக்களிப்போம் என அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச் செயலாளர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிப்போம். மத்தியஅரசின் பொருதாரா கொள்கையினால் பாதிப்புகள்தான் அதிகம். இதனால் கட்டுபாடற்ற விலைவாசி உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களைளை ரூபாய்க்கு விற்பனை செய்து, டாலரில் வாங்கப்படுகிறது. இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்தியஅரசு செயல்படுகிறது. மரபணு விதை இந்தியாவிற்கு தேவையற்றது. வெளிநாட்டு நிறுவனத்திற்காக இந்த மரபணு விதையை மத்தியஅரசு இந்தியாவில் அனுமதியளித்துள்ளது.
உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தாமல், விநோயகம் செய்வது குறித்து உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் பயனளிக்காது. தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை மூலம் 28 ஆயிரம் கடைகளும், நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 5 ஆயிரம் கடைகளும் நடைபெறுகிறது. இரண்டிலும் ஒரேவிதமான பணிகள் இருந்தும், ஊழியர்களின் ஊதியத்தில் வித்தியாசம் ரூ.5 ஆயிரம் உள்ளது. ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறையை தமிழகஅரசு உருவாக்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருள்கள் எடைகுறைவாக அனுப்பப்படுகிறது.
எனவே கடைகளில் எடை போட்டு பொருள்களை வழங்க வேண்டும். பொதுவிநியோகத்திட்ட அனைத்து பணிகளையும் கணினி மயமாக்க வேண்டும். போலி கார்டு மற்றும் முறைகேடுகளை தவிர்க்க கைரேகை பதிவு செய்து டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். நியாயவிலைக்கடை ஊழியர்களின் மாத ஊதியத்தை மின்னஞ்சல் மூலம் வழங்க வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்.14-ம் தேதி சென்னையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழகஅரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என கு.பாலசுப்பரமணியம் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் சிதம்பரம் மேலவீதி பெல்காம் சத்திரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச் செயலாளர் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, நிர்வாகிகள் சா.ராமச்சந்திரன், எம்.ராமலிங்கம், எம்.சுப்பிரமணியன், செல்லத்துரை, மாவட்டத் தலைவர் துரைசேகர், அமைப்புச் செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.