முகப்பு
தற்போதைய செய்திகள்

வறட்சி காலத்தில் நிவாரணம் பெற  விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் காப்பீடு திட்டம் குறித்து வேளாண்மை மற்றும் கூட்டுறவு விவசாய வங்கிகள் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என

Updated On : 21 பிப்ரவரி, 2014 at 6:46 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:57 AM

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் காப்பீடு திட்டம் குறித்து வேளாண்மை மற்றும் கூட்டுறவு விவசாய வங்கிகள் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

     விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் அதிகாரிகள் இடைய நடந்த விவாதம் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் தென்மாநில பசுமை தீர்ப்பாயம் தனியார்கள் குடிநீர் எடுத்து விற்பனை செய்வதை தடைசெய்துள்ளது. அதை உடனே இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

     விவசாயிகள் வறட்சி காலங்களில் காப்பீடு திட்டம் மூலம் பயனடையும் வகையில் வேளாண்மை, கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இம்மாதம் பிப்.24-ம் தேதியுடன் முடிவடைவதாக இருப்பதால் காப்பீடு செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பங்கேற்றோருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement

    தொடர்ந்து மழையில்லாததால் மானாவாரியிலும், கிணற்றுப்பாசனத்திலும் விவசாயம் பயிர் செய்தவர்களுக்கு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணமும் வழங்க வேண்டும். அதேபோல், கடந்தாண்டு வந்த வறட்சி நிவாரண உதவித் தொகை சரியான ஆவணங்கள் மற்றும் பட்டா எண் தவறு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் ரூ.7 கோடி வரையில் இருப்பாக இருக்கிறது.

    இதை திருப்பி அனுப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இத்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு வழங்கினால் விவசாய பணிகளை மேற்கொள்வது, பராமரிப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தொகையை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பவே கூடாது. தற்போது, வறட்சியாக இருப்பதால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால், அரசு மூலம் விரைவில் ஒவ்வொரு வட்டாரப் பகுதியிலும் தீவன நிலையங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விலங்குகளால் தென்னை மரங்கள் மற்றும் விளைபயிர்களை நாசம் செய்து வருகிறது. மம்சாபுரம் மலைப்பகுதி அடிவாரத்தில் தோட்டத்திற்கு சென்ற விவசாயி கருப்பழகு(40), கரும்பு காட்டிற்குள் மறைந்திருந்த காட்டெருமை தாக்கி படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயிக்கு வனத்துறை மூலம் நிவாரணம் அளிக்க வேண்டும்.  விலங்குகளால் சேதமடைந்த விளைபயிர்கள், தென்னை மரங்கள், மாமரங்கள் ஆகியவைகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குறைகளை தெரிவித்தனர்.

     அதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில், காப்பீடு திட்டம் குறித்து அந்தந்த வேளாண்மை வங்கிகள், வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று அலுவலர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கால்நடை தீவனம் வழங்குவதற்கு விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட இருக்கிறது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்திலும் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகளால் பாதிக்கப்படும் விளைபயிர்கள் மற்றும் மனித சேதாரங்களுக்குறிய நிவாரண தொகை உரிய நேரத்திற்குள் வழங்கவும் வனத்துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

     வறட்சி மாவட்டமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். ஏற்கனவே வந்த வறட்சி நிவாரண தொகை பெறாத விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து அரசுக்கு விவரம் எடுத்துரைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் உதயகுமார்(அருப்புக்கோட்டை), கீர்த்திகா பிரியதர்ஷினி(சிவகாசி), வனத்துறை கோட்ட அலுவலர் அசோக்குமார், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வேளாண்மை துறை துணை இயக்குநர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.