சிதம்பரம் தனி வட்டாட்சியர் அலுவலக தீவைப்பு சம்பவம்: சிபிஐ விசாரணைக்குட்படுத்த கோரிக்கை
சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் அலுவலக தீ வைப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர்
சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் அலுவலக தீ வைப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகஅரசின் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த நவ.26-ம் தேதி மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமுற்றது. அலுவலகத்தில் இருந்த ஆசிரியர்களின் 200-க்கும் மேற்பட்ட பணி பதிவேடுகள் மற்றும் நலத்துறை மூலம் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமுற்றன. ஆசிரியர்களின் சேமநல நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கணக்கில் வரவு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது முறைகேடு செய்ததாக ஊழியர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மைகாலமாக சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலக்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பணப் பலன்கள் பெற காத்து கிடக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. மேற்படி அலுவலகத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ள இனங்களின் முக்கிய ஆவணங்கள் திட்டமிட்டு தீ சம்பவம் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தீவைப்பு சம்பவத்தை மத்திய புலணாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோர வேண்டும் என ரா.காவயச்செல்வன் தெரிவித்துள்ளார்.