நெல்லை அரசு மருத்துவமனையில் 7 நாள் சிசுவை தவிக்க விட்டுச் சென்ற தாய்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி பெண் ஒருவர் பிரசவத்துக்காக உள்நோயாளியாகச் சேர்ந்தார். அவரது பெயர் லட்சுமி எனவும், கணவர் பெயர் இன்பராஜ் எனவும்,
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாள்களே ஆன சிசுவை தவிக்க விட்டுச் சென்ற தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 27-ம் தேதி பெண் ஒருவர் பிரசவத்துக்காக உள்நோயாளியாகச் சேர்ந்தார். அவரது பெயர் லட்சுமி எனவும், கணவர் பெயர் இன்பராஜ் எனவும், நான்குனேரியில் உள்ள ஜெ.ஜெ.நகரில் வசிப்பதாகவும் தெரிவித்து சேர்ந்தாராம். அவருக்கு கடந்த 29-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையையும், அவரையும் பார்க்க உறவினர்கள் யாரும் வரவில்லையாம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு குழந்தையை தவிக்க விட்டுவிட்டு லட்சுமி தலைமறைவாகிவிட்டார். இதையறிந்ததும் மருத்துவமனை ஊழியர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நான்குனேரி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அந்தப் பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது, அது பொய்யான முகவரி என்பது தெரியவந்ததாம்.
Advertisement
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை டீன் சௌந்திரராஜன் கூறுகையில், சிசுவை விட்டுவிட்டு பெண் மாயமானது குறித்து போலீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில், சிசு மருத்துவமனையில் பராமரிப்பில்தான் உள்ளது. மேற்கொண்டு காப்பகங்களில் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.