விருதுநகர் அருகே பாண்டியன் கிராம வங்கியின் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பண இருப்பு பெட்டியை உடைக்க முடியாததால் நகை மற்றும் லட்சக்கணக்கான பணம் ஆகியவை அதிஷ்டவசமாக தப்பியது.
விருதுநகர் அருகே உள்ளது சங்கரலிங்காபுரம் கிராமம். இங்கு பாண்டியன் கிராம வங்கியின் கிளை தனியார் வளாகத்தில் இயங்கி வருகிறது. இதில், பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கணக்கு வைத்து பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இங்கு வழக்கம் போல் கடந்த சனிக்கிழமை வங்கியின் வேலை நேரம் முடிந்ததும் பணியாளர்கள் பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் வழக்கம் போல் பணிக்கு திரும்பியுள்ளனர். அப்போது, வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதையடுத்து, உள்ளே நுழைந்து பார்த்ததில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வங்கி கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதோடு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், உடைக்க முடியாத காரணத்தாலும், அதிகாலை நேரம் போக்குவரத்து தொடங்கியிருந்த நேரம் என்பதாலும் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பாக வங்கியின் மேலாளர் சோமசுந்தரம் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் செய்தார். அதன் பேரில் கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு அங்கு பதிந்துள்ள ரேகைகளை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள், விவசாயிகளின் நகைகள் மற்றும் சேமிப்பு என லட்சக்கணக்கான பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.