முகப்பு
தற்போதைய செய்திகள்

திடீர் மழையால் தப்பியது பிசான சாகுபடி: தாமிரவருணி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் 3 தினங்கள் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் 3 தினங்கள் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்கும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாமிரவருணி பாசனத்தில் நீண்ட கால புள்ளி விவரங்களின்படி 1068 மி.மீ மழை கிடைத்து வந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக 815 மி.மீ மழைதான் பெய்து வந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு மழை அளவு 12.6 சதவிகிதம் குறைந்தது. மழை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை.

அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்ததால் பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலையில் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கினால்தான் பிப்ரவரி மாதம் இறுதி வரை பாசனத்திற்கு வழங்க முடியும் என சூழ்நிலை உருவானது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அணைகளில் நீரை சேமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஜன. 8 ம் தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 82.85 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீ்ர்மட்டம் 70.17 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 46.75 அடியாகவும் இருந்தது. அணைகளின் நீர் இருப்பு குறைந்து வந்ததை அடுத்து அணைகளில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனிடையே ஜன. 8,9 மற்றும் 10 ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணையில் 248 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 99 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 165.06 மி.மீ மழையும் பதிவானது. பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.

இதையடுத்து 3 தினங்களில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 14 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 15 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 13 அடியும், கடனாநதி, ராமநதி அணையகளின் நீர்மட்டம் தலா 10 அடியும் உயர்ந்தது. பிசான சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்கும் வகையில் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்ததை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 96.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 109.84 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.85 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 62.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 56.00 அடியாகவும் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அணைகளின் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 868.33 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 390 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 71.71 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணைத் திறப்பு: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகள் மூடப்பட்டன. பாசனம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழையால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →