மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்: ஆஸ்திரேலியா ரோட்டரி சங்கம் வழங்கியது
சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜி.வி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு ஆஸ்திரேலியா நாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பேப்பர் கப்
சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜி.வி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு ஆஸ்திரேலியா நாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டு ரோட்டரி மாவட்ட கவர்னராக உள்ள டோனி ஸ்பிரிங், அவரது துணைவியார் காரலா ஸ்பிரிங் ஆகியோர் 2010-ம் ஆண்டு சிதம்பரம் நகருக்கு வருகை தந்த போது ஜி.வி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியை பார்வையிட்டனர். அப்போது அப்பள்ளிக்கு உதவு முடிவு எடுத்து ஆஸ்திரேலியா ரோட்டரி கூட்டங்களில் தங்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருள்களுக்கு பதிலாக இப்பள்ளிக்கு உதவிட ரூ.15 லட்சம் நிதி வசூலித்தனர்.
தற்போது மீண்டும் சிதம்பரம் நகருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த ஆஸ்திரேலியா நாட்டு மாவட்ட கவர்னர் டோனி ஸ்பிரிங், அவரது துணைவியார் காரலா ஸ்பிரிங் ஆகியோர் தாங்கள் வசூலித்த தொகை ரூ.15 லட்சத்தின் மூலம் உடல்நலம், மனநலம் வளரும் வகையில் உடற்பயிற்சி உபகரணங்கள், பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை சிதம்பரம் ஜி.வி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு வழங்கி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்துப் பேசினர். அவர்கள் பேசுகையில் 'இப்பள்ளியை பார்வையிட்ட போது, மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மனிதாபமான முறையில், அவர்களின் வாழ்க்கை முன்னேற ஏதாவது உதவிட வேண்டும் என்ற முறையில் எண்ணம் ஏற்பட்டதின் பேரில் இந்த உதவியை செய்துள்ளோம்' என குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சீனுவாசன் தலைமை வகித்தார். ஜி.வி பள்ளி டிரஸ்டிகள் ஜி.வி.பாலதண்டாயுதம், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர்கள் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், டாக்டர் எம்.கணபதி, ரோட்டரி துணை கவர்னர் டாக்டர் வி.சிவப்பிரகாசம், டாக்டர் எம்.கணபதி, டி.ஆர்.ஜெயராஜ், ஆர்.ராஜசேகரன், ரோட்டரி சங்க பொருளாளர் சோனா பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இ.மகபூப்உசேன் நன்றி கூறினார்.