நெல்லை மாவட்டத்தில் 2.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து
திருநெல்வேலி மாவட்டத்தில் 1750 மையங்களில் நடைபெற்ற முகாமில் 5 வயதுக்குட்பட்ட 2.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 1750 மையங்களில் நடைபெற்ற முகாமில் 5 வயதுக்குட்பட்ட 2.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
நிகழ் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜன. 19 ம் தேதியும், 2 ஆவது கட்டமாக பிப். 23 ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார்.
இதில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. விஜயகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜசேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியன், மருத்துவமனை உறைவிட மருத்துவர் நடராஜன், குழந்தைகள் நலத்துறை தலைவர் தேவிகலா, பாளை மண்டலக்குழுத் தலைவர் எம்.சி. ராஜன், மாநகராட்சி மருத்துவ அலுவலர் பாலகணேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயண்நாயர், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 145 மையங்களிலும், புறநகர் பகுதியில் 1505 மையங்களிலும் மற்றும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள், ரோட்டரி சங்கம், அரசு பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்பட 6,920 பேர் முகாமில் பணியாற்றினர்.
மேயர் தொடங்கினர்: பாளையங்கோட்டையில் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் மேயர் விஜிலாசத்யானந்த் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு மருத்துவமனையில் துணை மேயர் பூ. ஜெகநாதன் தொடங்கி வைத்தார். சிந்துபூந்துறை யூனிட் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் தொடங்கி வைத்தார். முகாமில் மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.